பிந்திய செய்திகள்

வார்த்தைகளே வாழ்வின் வரம்!

ஒரு நாள் மாலைப்பொழுதில் துறவி ஒருவர், ஒரு கிராமத்திற்கு வருகை தந்தார். அக்கிராமத்தினர் துறவியிடம், “”ஐயா! தாங்கள் இங்கு வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. எங்கள் கிராமத்து பெரியவர் ஒருவர்  உடல் நலமின்றி இருக்கிறார். நீங்கள் முயற்சி செய்து அப்பெரியவரைக் காப்பாற்றுங்கள். அவர் மிகவும் நல்லவர்” என்றழைத்தனர். துறவியும், “”அப்படியே ஆகட்டும்!” என்று கூறி, அவ்விடம் சென்றார். அங்கு கூடியிருந்தவர்களிடம், “”பெரியவர் நலம்பெற நான் சொல்லும் மந்திரத்தை நீங்கள் அனைவரும் மனதார திருப்பிச் சொல்லுங்கள். அவரை நலமாக்க முடியும்”  என்றார். 

அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், “”ஐயா… அது எப்படி சாத்தியமாகும்? பெரியவரை நலமாக்க வேண்டும் என்றால் ஒரு நல்ல மருத்துவரை அழைத்து வாருங்கள்; அவருக்கு வைத்தியம் செய்யுங்கள். அதை விட்டுவிட்டு வெறும் வார்த்தைகளை எல்லாரும் உச்சரிப்பதால் அவருக்கு ஒன்றும் ஆகிவிடாது” என்று “வெட்டென பேசேல்’ என்ற ஓளவையாரின் ஆத்திச்சூடியினை மறந்து கோபமாகப் பேசினார். துறவி இளைஞனைப் பார்த்து, “”எனது வாழ்க்கையிலேயே மிகப் பெரிய முட்டாளை இன்று தான் பார்க்கிறேன்” என்றார். இதைக் கேட்ட அந்த இளைஞனுக்கு கோபம் தலைக்கேறியது. அவர் துறவியைப் பார்த்துக் கோபமாக, “”நான் என்ன முட்டாளா! நீங்கள்தான் முட்டாள்” என்று கூச்சலிட்டார். உடனே துறவி, “”நான் உன்னிடம் முட்டாள் என்ற வார்த்தையைத்தானே உச்சரித்தேன். அது உனக்குள் ஏன் கோபத்தை உருவாக்கியது? அப்படியென்றால் எதிர்மறை வார்த்தை உன்னைக் கோபப்படுத்தும் என்றால், நேர்மறை வார்த்தை ஏன் அவரை நலம் பெறச்செய்யாது” என்றார்.

“”இதுதான் வார்த்தைகளின் பலம்” என்றார். எதிர்மறை வார்த்தைகள் ஒரு மனிதனைக் காயப்படுத்தும்.  ஆக்கப்பூர்வமான வார்த்தைகள் மனதிற்கு மருந்தாக அமையும். இளைஞன் வார்த்தையின் ஆற்றலை அறிந்தான். கோபத்தில் பேசுகின்ற சொற்கள் சுவற்றில் அடித்த ஆணிகள். நாம் ஆணிகளென்னும் வார்த்தைகளை திரும்பி எடுத்தாலும், சுவற்றினை ஆழமாய் காயப்படுத்திய ஓட்டைகளை எளிதில் சரிப்படுத்த முடிவதில்லை. நேர்மறையான வார்த்தைகளே, நேர்த்தியான மனிதர்களை உருவாக்குகிறது. 

சொல், மொழியின் வெளிப்பாடு மட்டுமல்ல, அது உள்ளத்தின் வெளிப்பாடு; சொற்கள் வெறும் வார்த்தைகள் அல்ல. அது அவர் வாழ்கின்ற வாழ்வின் அடையாளம். “உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாகும்’ என்ற மகாகவி பாரதியின் வரிகளைப்போல் எந்த மனதில்  நல்ல எண்ணங்கள் விதையாகி வளர்கின்றதோ, அந்தச்செடியில் அழகிய பூக்களாய் வார்த்தைகள் மலரும். அது அனைவர் மனதையும் காந்தமாய் ஈர்க்கும். பண்போடு அழைத்து, இனிமையாகப் பேசுபவர்கள் சொல்கின்ற பணியினை வேகமாகச் செய்வதற்கு உலகமே காத்திருக்கும் என்பதை 

“விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்’

என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.  

அன்போடு பேசினால் வார்த்தைகள் பூக்களாகும். விளைவு பேசுபவர்களின் கழுத்தில் அது மாலையாகும். கோபத்தில் கனன்று பேசும்போது வார்த்தைகள் அம்பாகும். அது தொடுத்தவர் மனதைப் புண்ணாக்கிவிட்டுத்தான் அடுத்தவர் மனதைக் காயப்படுத்தும். கோபத்திற்கு துணையாக வார்த்தை என்னும் கணையை கையில் எடுக்கும் மனிதன் சுற்றம் இழந்து, சொந்தமின்றி தனி மரமாவான். வீட்டில், பொது இடங்களில் பேசும்போதுகூட இறைவன் சன்னதியில் பேசுவதாக நினைத்துப் பேசுகின்றபோது, சொல்லுக்கும், மந்திரத்திற்கும் வேறுபாடு இல்லை. அவையில் பேசுகின்ற சொற்களை வீட்டில் கற்றுத்தரும் பெற்றோரின் குழந்தை அவையத்து முந்தியிருப்பர். 

வார்த்தைகள் வரமாவதும், சாபமாவதும் வழங்குபவரின் கையில் உள்ளது. மனிதத்தின் மனதினைச் சொற்களால் பிரதிபலித்த கண்ணாடி இலக்கியம் முல்லைப்பாட்டு. மன்னருடன் வீரர்கள் போருக்குச் சென்றிருந்தனர். அவர்களது பிரிவால் அவரது துணைவியர் வருந்தி  காத்திருந்தனர். ஒவ்வொரு நாளும் மாலை என்றும் போல் வந்தது. ஆனாலும் தலைவன் மட்டும் திரும்பி வரவில்லை. தலைவன் வரும் வழிபார்த்து தலைவி ஊருக்கு வெளியே இருந்த கோவிலின் அருகில் சென்று நின்றாள். “இன்றாவது இந்த பாதை தனது தலைவனை அழைத்து வருமா?’ என்று  வழிமேல் விழி வைத்தாள். தனது தலைவன் வருவதைப் பற்றி யாராவது தகவல் சொல்வார்களா என எதிர்பார்த்திருந்தாள். இதனை “விரிச்சி கேட்டல்’ என்கிறது இலக்கணம். அப்பொழுது ஒரு மாட்டிடையன் மாடுகளை மேய்த்து விட்டு வீடு திரும்பினான். மாடுகள் அவனைப் பின் தொடர்ந்தன. அப்போது கன்றுக்குட்டி ஒன்று அத்தலைவியைப்  போலவே அந்த கிராமத்து வாசலில் தனது தாய்ப் பசுக்காக ஏங்கி  நின்றது.  மாட்டிடையன் அந்த கன்றினைப் பார்த்து, “”இதோ உனது தாய்ப் பசு வருகிறது” என்று சொல்லிவிட்டு, அக்கோயிலைக் கடந்தான். இதனைக் கேட்டதும், இடையன் தனக்காகச் சொல்லியதாக நினைத்தாள். அதனை இறைவனின் வரம் என நினைத்தாள். தன் தலைவன் வந்துவிடுவான் என்று தலைவி உள்ளம் மகிழ்ந்தாள். ஆறுதல் படுத்துகின்ற வார்த்தைகளால் ஆறாத புண்ணும் ஆறிவிடும். பாராட்டப்படுகின்ற வரிகளால் துள்ளாத மனமும் துள்ளி விளையாடும். 

வளம் வாய்ந்த வார்த்தைகளைப் பேசுபவர்களே பலம் வாய்ந்தவர்கள். பறவைகள் பறவைகளாகப் பிறந்து பறவைகளாக மடிகின்றன. விலங்குகளும் அப்படியே. மனிதன் மட்டுமே மனிதனாய் பிறந்து மனிதனாக வாழ முடியும். அவனைவிட கீழாய் விலங்காக மாற முடியும். வாழ்வில்  உன்னத நிலையை அடைந்து இறைநிலையை அடைய முடியும். இத்தகைய இயற்கை நியதியினைத் தனது சொல்வன்மையால் மாற்றியவர் அனுமன். இலங்கையில் சீதையின் இருப்பிடம் அறிந்து திரும்பி வந்தார். தான் கண்ட காட்சியை இராமனிடம் சொல்ல முற்பட்டபோது, “கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்’ என்ற வரிகளில் சீதை உயிரோடு இருக்கிறாள்; கற்புடன் இருக்கிறாள்; அதைக் கண்ணால் பார்த்தேன் என்பதை ஒற்றை வரிகளில் சொல்லியதால் தான் அனுமன் “சொல்லின் செல்வன்’ என இராமனின் மனதில் இடம் பிடித்தார். ஆதலால்தான் இன்றும் இறை மேடையில் இராமன், இலட்சுமணன், சீதாப் பிராட்டியோடு வானரர் இனத்தில் பிறந்த அனுமனும் இடம் பிடித்தார்.

வார்த்தைகள்  ஆற்றல் வாய்ந்தவை. யு கேன் ஹீல் யுவர்செல்ப் (வர்ன்  ஸ்ரீஹய் ஏங்ஹப் ஹ்ர்ன்ழ்ள்ங்ப்ச்) என்ற புத்தகத்தின் ஆசிரியரான கோலின், தனக்கு ஏற்பட்டிருந்த நோயைத் தன்னுடைய மனோசக்தியால் விரட்டியடித்தார். மனதின் பலத்தை தருகின்ற சொற்களை ஒரு கேரட்டை வைத்து தன்னுடைய புத்தகத்தில் விளக்கியுள்ளார். சில கேரட்டுகளை எடுத்து இரண்டு பாகங்களாகப் பிரித்து நட்டுவைத்தார். தொட்டியில் ஒரு +(கர்ஸ்ங்) வடிவத்தைக் குறியிட்டார். மற்றொரு தொட்டியில் -(ஏஹற்ங்)  வடிவத்தை குறியிட்டார். தினமும் (+) தொட்டிக்குத் தண்ணீர் ஊற்றி, “”உன்னை எனக்குப் பிடிக்கும், நீ நன்றாக வளர்வாய்” என நேர்மைறையான எண்ணங்களால் அவற்றை வாழ்த்தினார். 

(-) குறியிட்ட தொட்டியில் தண்ணீர் ஊற்றி, “” நீ நன்றாக வளர மாட்டாய்! உன்னை எனக்குப் பிடிக்கவில்லை” என்று எதிர்மறை வசைகளைப் பொழிந்தார். ஒரு வாரத்திற்கு பிறகு (+) தொட்டியில் இருந்த கேரட்டுகள் துளிர்விட்டிருந்தன. (-) தொட்டியில் இருந்த கேரட்டுகள் கருகியிருந்தன. நேர்மறை வார்த்தைகளில் உயிரை உருவாக்கும் சக்தி இருப்பதே இந்த ஆய்வின் உண்மை.  

பேசுவது மனிதம். பேசாமலிருப்பது தெய்வீகம்.  “”நாம் பேசுகின்ற வார்த்தைகள் உண்மையாக இருந்தாலும், அது பிறருக்குப் பயனுள்ளதாக இராவிட்டால், சிலரால் அது விரும்பப்படாவிட்டால்,  அதைப்  பேச வேண்டிய அவசியமில்லை” என்கிறார் புத்தர். நாம் பேசுவது உண்மை என்று விரும்பியதைப் பேசினால், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து விடும். சிந்திக்காமல் பேசுவது முட்டாள் தனம். சிந்தித்து பேசுவதே உத்தமம்.  

ஒரு  குருவிடம் பயின்ற சீடர்கள் விடைபெறும் காலம் வந்தது. அப்போது ஒரு சீடர், “”சுவாமி!   நாங்கள் எப்படி பேசவேண்டும் என்று  அறிவுரை கூறுங்கள்” என்றார். “”நீங்கள் பேசுவதற்குமுன், நாம் பேசப்போவது உண்மைதானா? உண்மையென்றால் அது நாம் சொல்பவருக்கு தேவையானதா?  அதைக் கூறுவதால் கேட்பவருக்கு நன்மை பயக்குமா?  இறுதியில் இதை இனிமையாகச் சொல்ல முடியுமா? என்ற நான்கு கேள்விகளுக்கும் பதில் “ஆம்’  என்றால் பேசத் தொடங்குங்கள். இல்லையெனில் அமைதியாகவே இருந்து கொள்ளுங்கள்” என்றார். ஒருமுறை பேசுவதற்கு முன்னால் இருமுறை யோசிப்பவர்களின் பேச்சுகள் வரலாறாகின்றன.

சிலரது பேச்சு மலைக்க வைக்கும். நம்மை வியக்க வைக்கும்.  பேச்சில் பண்பு வெளிப்படுவது போல், பேசும் விதத்தில் பாரம்பரியமே வெளிப்படும். அமெரிக்க நாட்டில் 1893 ஆம் வருடம் செப்டம்பர் 11- இல்  உலகத் தலைவர்களெல்லாம் அங்கிருப்பவர்களை “”சீமான்களே! சீமாட்டிகளே!” என்றழைத்தபோது, சுவாமி விவேகானந்தர் மட்டும், தன் காந்தக் குரலால் “”எனதருமை அமெரிக்கச் சகோதர, சகோதரிகளே!” என்று அழைத்தபோது தங்களை மறந்து அவர்கள் கைதட்டிய ஓசை விண்ணைப் பிளந்தது.  இந்திய தேசத்தின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் விவேகானந்தர் தனது மொழிகளால் அமெரிக்க மண்ணில் அன்று வித்திட்டார். இன்று ஆலமரமாய் நமது பெருமை உலகிற்கு வெளிப்படுகிறது.  

பேச்சு ஒரு கலை. இறைமை தந்த அற்புதப் பரிசு. அதைச் சிதறாமல் சிக்கனமாய் பயன்படுத்துபவருக்கே பாராட்டுகள் அதிகம் கிடைக்கும். “சொல்லின் சுருக்கம் அறிவின் உயிர்’ என்பார் ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியர். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்ற அழைத்தனர். சர்ச்சில் அருக்கே உரிய பாணியில் தலையில் தொப்பி, கையில் ஊன்றுகோல், வாயில் சுருட்டோடு மேடையேறினார். கைதட்டல் அரங்கை அதிர வைத்தது. பிரசங்க மேடைக்கு வந்தார். எப்பொழுதும் போல அவர் எழுதி வைத்திருக்கும் குறிப்பினை மேடையின் பீடத்தில் வைப்பதற்குப் பதிலாக தனது தொப்பியை வைத்தார். மிகவும் உயர்ந்த தொனியில் “”எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்” என்று சூளுரைத்துவிட்டு, தொப்பியை தலையில் வைத்துகொண்டு புறப்பட்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக வரலாற்றில் மிகச்சிறிய உரை அது. ஆனாலும், இங்கிலாந்து மக்களின் உள்ளத்தில் இன்றும் வாழும் வார்த்தைகள்.   

இனியவை பேசினால் இன்பம் பெருகும்; பகைமை விலகும்; குடும்பம் உயரும்; சமூகம் சிறக்கும்; வாழ்வு மகிழும்; உறவுகள் விரியும். பேச்சு என்பது வாழும் வாழ்க்கையின் நெறிமுறை. இன்சுலின் சர்க்கரை நோயிலிருந்து காப்பதுபோல் இனிய சொல் பிரச்னைகளில் இருந்து காக்கும்.

அன்று சிறுவனுக்கு அவனது தாயின் மீது கோபம். கோபத்தோடு, “”நான் உன்னை வெறுக்கிறேன், நான் உன்னை வெறுக்கிறேன்”  என்று கத்தினான். அம்மாவின் பார்வையிலிருந்து ஓடிப்போய்,  அருகிலிருந்த மலை குகை வரை அந்த வார்த்தைகளை சத்தமாய் சொல்லிக் கொண்டே ஓடினான். 

அவனது குரல் அருகில் இருந்த குகையில் பட்டு எதிரொலித்தது. அந்த எதிரொலியும் “நான் உன்னை வெறுக்கிறேன்’ என்று சத்தமாய் சொன்னது. மனிதச் சுவடுகளே இல்லாத ஒரு மாபெரும் சத்தத்தில் எதிரொலியைக் கேட்டதும் பயந்தே போனான் அந்தச் சிறுவன். 

தாயிடம் மீண்டும் ஓடி வந்தான். அவளது காலினை இறுகப்பிடித்துக்கொண்டு  நடந்ததைச் சொன்னான். அன்னைக்கு அது புரிந்திருந்தாலும், மகனுக்கு அதைத் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக, அதே மலை குகைக்கு  அழைத்துச் சென்றார். ஒரே ஒரு நிபந்தனை. இம்முறை “நான் உன்னை விரும்புகிறேன்! நான் உன்னை விரும்புகிறேன்!’  என்று சத்தமாய் கத்தச் சொன்னார். அடுத்த வினாடியில் மொத்த பள்ளத்தாக்குமே எதிரொலித்து அவனை விரும்பியதைக் கண்டான். 

அன்னை ஆச்சரியமாக மகனிடம் சொன்னார்: “”நமது வாழ்க்கையும் இதுபோன்றதுதான். இந்த உலகத்திற்கு நாம் எத்தகைய வார்த்தைகளை கொடுக்கின்றோமோ, அத்தகைய வாழ்க்கையை நாம் உலகிலிருந்து பெறுவோம்”

எழுத்துகளின் தொகுப்பு வார்த்தை!
வார்த்தைகளின் தொகுப்பு வாழ்க்கை! 
வார்த்தைகளில் வரம்பு மீறினால் வாழ்க்கை சாபம்!
வார்த்தைகளைக் கட்டுப்படுத்தினால் வாழ்க்கை  வரம்!!

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts