பிந்திய செய்திகள்

உழைப்பவருக்கே உலகம்!

ஓர் அதிகாலையில், அமெரிக்காவிலிருந்து விமானம் ஒன்று கிளம்பியது. கிளம்பிய அரைமணி நேரத்தில் அனைவரும் உறங்க ஆரம்பித்தனர். ஒரு வயதான பெரியவர் மட்டும் சில புத்தகங்களைப் படித்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கருகில் இருந்த இளைஞர், அவர் அமெரிக்காவின் மிகச்சிறந்த மனிதரும், தொழிலதிபருமான ராக்பெல்லர் என்பதைத் தெரிந்துகொண்டார். 

“ஐயா, நீங்கள்தான் ஏகப்பட்ட பணமும், புகழும் பெற்றுவிட்டீர்களே! இன்னும் இந்த வயதான காலத்தில் ஏன் உழைக்கிறீர்கள்? நிம்மதியாகத் தூங்க வேண்டியதுதானே?” என்றார். “சரிதான், இப்பொழுது விமானி இவ்விமானத்தை நல்ல உயரத்தில் பறக்க வைத்துவிட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. இப்பொழுது விமானி என்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும்?” என்றார். 
“விமானம் கீழே விழுந்து பெரிய விபத்து ஏற்பட்டுவிடுமே” என பதற்றத்தோடு பதிலளித்தார் இளைஞர். 
இதைக்கேட்டு புன்னகைத்த ராக்ஃபெல்லர், “வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான்.

கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, “உயரத்தைத் தொட்டு விட்டோமே’ என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும்.

உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்” என்று பதிலளித்தார். அப்பயணத்தில் அவ்விளைஞனுக்கு வாழ்க்கையை விழிப்படையச் செய்தவர் ராக்பெல்லர். 

உழைப்பு ஒரு நதியைப் போன்றது. அதன் பயணம் பல தடைகளைத் தாண்டிச் சென்றாலும், அது செல்லும் வழியெல்லாம் நம்பிக்கைப் பூக்களை மலரச் செய்கிறது. வறண்டிருக்கும் நதி தன்னுள் உள்ள ஊற்றினால் நீரினைத் தருவதுபோல், உலகிற்கு தனது அனுபவங்களால் வாழ்வின் செழிப்பினைத் தருவதுதான் உழைப்பு. 

உழைப்பதால் உழைத்தவரின்மதிப்பு கூடுவதோடு, உழைப்பின் மதிப்பும் உயரும். கல்லினில் உழைத்தால் மனிதன் சிற்பியாவான், கல் சிற்பமாகும். சொல்லினில் உழைத்தால் மனிதன், கவிஞனாவான். வார்த்தைகள் கவிதையாகும். 
ஒட்டுமொத்த போர்ப்படையினரும் களைப்பில் உறங்கிக் கொண்டிருக்கும்போது, கனலின் வெளிச்சத்தில் படித்துப் படித்து போர்த்திறம் தெரிந்தபோது, சாதாரண சிப்பாயாயிருந்த நெப்போலியனை படைத்தலைவனாக்கி அழகு பார்த்தது உழைப்பு.

ஒட்டுமொத்த உலகத்தையும் தனது கழுகுப் பார்வையிலே பார்த்துக் கொண்டிருந்தன வல்லரசு நாடுகள். அக்கண்களுக்கு கறுப்பு மை பூசி பொக்ரானில் அணுகுண்டினை சோதித்துக் காட்டியும், வானுயர இந்தியாவின் திறமையை ஏவுகணைகளால் நிலைநிறுத்தியதால்தான், இந்தியாவின் ஜனாதிபதியாக டாக்டர் அப்துல் கலாமை அழகுபடுத்திப் பார்த்தது அல்லும் பகலும் ஓய்வறியாத உழைப்பு. உழைக்கும் கரங்கள்தான் அழகிய கரங்கள் என்பதை,
” நீண்ட நாள் முழுதும்  கணத்திற்கு கணம் 
நேர்மையாய், துணிவாய்
உண்மையாய் உழைக்கிறவன் கரங்களே 
அழகிய கரங்கள்’ என்கிறார் அக்கினிச்சிறகுகளான அப்துல்கலாம்.

1986-இல் அமெரிக்காவில் ஜார்ஜ் கலப் என்ற பேராசிரியர் திறமையாளர்களைப்பற்றி ஓர் ஆராய்ச்சி நடத்தினார். அதற்காக 1500 சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்தார். ஆராய்ச்சியின் முடிவாக சாதனையாளர்கள் திறமையானவர்கள் இருப்பினும், அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் உழைத்ததனால்தான் சாதித்தார்கள் என்று வெளியிட்டார்.

நீரில் மேற்பகுதியில் அழகாய் நீந்துகின்ற வாத்தினைப் பார்ப்பதற்கு எவ்வித செயல்பாடும் இல்லாமல் நீந்துவதாகத் தெரியும். ஆனால் நீருக்கடியில் அதன் கால்கள் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும். ஒரு பாடும் பறவை (Humming Bird) பறக்க வேண்டுமானால், ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் முறை தனது சிறகுகளை அடித்துப் பறக்க வேண்டியிருக்கிறது.

உண்மையில் வெற்றியாளர்கள் பரிணமிக்கின்றபோது அவர்களின் உழைப்பு வெளியே தெரிவதில்லை. ஆனாலும் அவர்கள் ஊழின், உப்பக்கத்தையும் காணத் தவறுவதில்லை. அளப்பரிய சிற்பங்களைத் தன் அசாத்தியமான திறமையால் உலகிற்குத் தந்த மைக்கேல் ஏஞ்சலோ, “என் திறமையை அடைய நான் எவ்வளவு பாடுபட்டு உழைத்தேன் என்பதை மக்கள் அறிந்தால், நான் வடிக்கும் சிற்பமெல்லாம் ஓர் அதிசயமாகவே தோன்றாது” என்றார்.

“கண்ணில் காணும் சிற்பத்தின் அழகை விட மண்ணில் விழுந்த வியர்வைதான் அழகு” என்கிறது ஏஞ்சலோவின் வாசகம்.
ஒரு பணக்காரத் தந்தை. ஆனால், அவரது மகன் சுயமாகச் சம்பாதிக்கின்ற காலம் வந்த பிறகும் அதற்கான முயற்சியில்லாமலிருந்தார். “உழைக்க மனமில்லாதவன் எவரும் உண்ணலாகாது’ என்ற பைபிளின் வரிகள் நினைவுக்கு வந்ததுபோல், “இனிமேல் சம்பாதித்துக்கொண்டு வந்தால்தான் வீட்டில் தங்குவதற்கு இடம்” என்று கண்டிப்பாய் சொன்னார். மறுநாள் காலை கிளம்பிய மகன், மாலை வீடு வந்துசேர்ந்தார். ஒரு ரூபாய் நோட்டை எடுத்து தந்தையிடம் தந்தார். எரிந்து கொண்டிருந்த அடுப்பில் அப்பணத்தை தூக்கிப்போட்டார் தந்தை. அது எரிந்து சாம்பலானது. எவ்வித வருத்தமில்லாமல் தூங்கினார் இளைஞர். மறுநாளும் பணிக்குச் சென்றார். வீட்டில் நுழைந்ததும் மகன் கொடுத்த ரூபாயைத் தந்தை அடுப்பில் போட்டார். மூன்றாவது நாள் அப்பாவிடம் பணத்தைத் தந்தார். அப்பா அதேபோல அடுப்பினில் தூக்கிபோட, ஓடிச் சென்று அப்பாவின் கையைப் பிடித்தார். “அப்பா! அப்பணத்தை நெருப்பில் போடாதீர்கள்” என்று அலறினார். 

“மகனே… இன்றுதான் நீ உண்மையாக உழைத்திருக்கிறாய்” என்றார் தந்தை. “அதெப்படி கண்டுபிடித்தீர்கள்?” என்ற மகனின் கேள்விக்கு, “மகனே, நீ உழைத்துச் சம்பாதிக்காத பணம் கரியானபோது நீ கவலைப்படவில்லை. அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். உழைப்பின் அருமையைத் தெரிந்தவன்தான் அதனைச் செலவழிப்பதிலும், சேமிப்பதிலும் அக்கறை கொள்வான்” என்றார் தந்தை.

ஆகவே, உழைப்பு ஓர் உன்னதம். அதை மறுப்பவன் சோம்பேறி. வெறுப்பவன் முட்டாள். ஆராதிப்பவன் மனிதன். உறுதியாய்ப் பிடிப்பவன் சாதனையாளன். உருமாறுபவன் சரித்திரம்.

பண்டைய தமிழ்நாட்டில் வாழ்ந்த இளைஞர்கள் ஒவ்வொருவரும் வீரர்களாயிருப்பதில் பெருமை கொண்டவர்கள். அவர்கள் தங்கள் வாழ்வை தமது நாட்டிற்காகவே அர்ப்பணித்தவர்கள். எதிரிநாட்டுப் படையினர் படையெடுத்து வந்தால் முனை முகத்து நிற்பவர்கள். தமிழ்நாட்டின் எல்லையை விரிவாக்க முன்னேறிச் சென்று எதிரி நாட்டை வேட்டையாடுபவர்கள். அவர்களது ஒவ்வொரு நாள் பணியும் போர்புரிவதே. போரினில் காயங்கள்தாம் வீரனுக்கு தினமும் கிடைக்கும் பரிசு. அதுதான் விழுப்புண்.

அவ்வீரர்கள், தாங்கள் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்ப்பதுண்டு. அதில் தங்களின் உடலில் விழுப்புண் படாத நாட்களை எல்லாம் இம்மண்ணில் வாழ்ந்த நாட்களாகவே கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. விழுப்புண்பட்ட நாட்கள் மட்டுமே அவர்கள் வாழ்ந்த நாட்களாக கருதுவார்கள் என்பதை 
விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து
என்கிறார் உலகப் பொதுமுறை கண்ட நம் திருவள்ளுவர்.

உழைப்பு என்பது வெற்றிவரை அல்ல. வாழ்வின் இறுதி வரை. அதில் வாரத்தின் இறுதி நாளும் விடுமுறை அல்ல. வாரத்தின் முதல் நாளும் ஓய்வு அல்ல. வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக் கிழமையை ஓய்வு நாளாகக் கருதாமல் உழைக்கும் நாளாகக் கருதுபவர் விழுப்புண் கண்ட வெற்றியாளராகிறார். 

ஒரு நாட்டினை முன்னேற்றப் பாதைக்கு வித்திடுவது அந்நாட்டின் இயற்கை வளம் அல்ல, அந்நாட்டின் மனிதவளமும் அதனை நடத்திச் செல்லும் நிர்வாகத் திறனுமேயாகும். இரண்டாம் உலகபோரின்போது இயற்கை வளமும் கனிமவளமும் சாம்பலாகிப்போன ஜப்பான், இன்று சரித்திரம் படைப்பதற்குக் காரணம், அந்நாட்டின் கடின உழைப்பேயாகும்.

உழைப்பு நமக்கானது மட்டுமல்லாமல், நம்மை வளர்த்த நாட்டிற்காக இருக்கவேண்டும். “எழுமின்! விழுமின்! கருதிய கருமம் கைகூடும் வரை நில்லாது உழைமின்!’ என்கின்ற சுவாமி விவேகானந்தரின் வரிகள் நம் இந்திய தேசத்தின் முன்னேற்றத்திக்கான அறை கூவல். இன்னும் ஒருபடி மேலாக, “ஒவ்வோர் இளைஞனும் மனிதகுலத்தின் பெருமைக்காகப் பாடுபடக்கூடிய ஒரு வேலையைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அப்போது சுமைகள் நம்மை நசுக்காது. ஏனென்றால் அவையெல்லாம் அனைவருக்குமான தியாகங்கள். நமக்கு கிடைக்கின்ற மகிழ்ச்சியோ எல்லையற்றது. கோடான கோடி மக்களுக்கும் சொந்தமானது. கஞ்சத்தனமில்லாதது, அகங்காரமற்றது. நமது சாதனைகள் நீடித்து வரும் என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் உன்னதமான மனிதர்கள் வடிக்கும் கண்ணீரால் நமது சாம்பல் கழுவப்படும்” என்கிறார் ஜெர்மனியின் காரல் மார்க்ஸ். 

கிராமங்களில் தானியக் கதிர்களை சாலைகளில் கொட்டி, வாகனங்கள் அதன் மேல் பயணிக்க, தானியங்கள் தனிப்படுவதற்காக காத்திருப்பர். அர்த்த ராத்திரியில் பயணிக்கும் ஒற்றை வாகனத்தின் நான்கு சக்கரங்களை எதிர்பார்த்து உறக்கமில்லாமல் காத்திருக்கும் முதிய விவசாயிகள் ஏராளம். அவர்கள் கண்ணுங் கருத்துமாய் தானியங்களை உருவாக்கியதோடு நாட்டின் தலைமகனுக்கும் உணவளிப்பவர்கள். வியர்வை என்னும் முத்துக்களில் தெரியும் அவர்களது உழைப்புதான் உலகையே அவர்கள் பின் தொடரச் செய்கிறது.

இதனை, 
களைபோக்கும் சிறு பயன் விளைக்க இவர்கள் உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின் ஒவ்வொரு துளியிலும் கண்டேன் இவ்வுலகு உழைப்பவர்க்குரியது என்பதையே! என்ற பாவேந்தன் பாரதிதாசனின் வரிகளுக்கேற்ப, உலகம் உழைப்பவருக்கே!

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts