பிந்திய செய்திகள்

வியர்வை சிந்தி உழைப்பவர்களின் கையில் பொன்னாய் மாறும் இலை!

மிகவும் பழமை வாய்ந்த மரங்களில் இந்த வன்னி மரமும் ஒன்றாகும். தொன்மையான வன்னி மரம் இன்றும் கம்பீரமாக பல ஆலயங்களில் ஸ்தல விருட்சமாக காட்சி தருவதை பார்க்க முடிகிறது. பல அதிசயங்களையும், அற்புதங்களையும் தன்னுள் புதைத்து கொண்டிருக்கும் இந்த வன்னி மரத்தை தொட்டு வணங்கினாலே நினைத்தது நடக்கும் என்கிறது புராணங்கள்! அத்தகு வன்னி மரத்தின் சிறப்புகளையும், அதனை வழிபடுவதால் கிடைக்கும் பயன்களையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் பழமை வாய்ந்த ஆலயங்களில் தலவிருட்சமாக இருக்கும் இந்த வன்னி மரத்தின் காற்றை சுவாசித்தாலே சுவாச பிரச்சனைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது. இலை முதல் வேர் வரை மூலிகை சக்திகளை கொண்டுள்ள இந்த வன்னி மரத்தின் பெருமைகள் பல கல்வெட்டுகளில் இன்றும் காணப்படுகிறது. வன்னி மரப்பட்டை கஷாயம் செய்து குடித்தால் தீராத கருப்பை பிரச்சனைகள் தீர்ந்து குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கிற நம்பிக்கை உண்டு. ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் படைத்த இந்த மூலிகை பல அபூர்வ நோய்களைக் கூட குணப்படுத்த வல்லவை.

சனி பகவானுடன் தொடர்புடைய இந்த வன்னி மரத்தை வணங்கினால் சனி தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகமாக இருக்கின்றது. சனி பகவானால் உண்டாகும் தோஷங்கள், நோய்கள் தீர்வதற்கு வன்னி மரத்தை வலம் வந்து வணங்கினால் தீரும். பாலைவனத்தில் கூட வளரக்கூடிய இந்த வன்னி மரம் நல்ல கதிர்வீச்சுகளை உட்கிரகித்து நோய் தீர்க்கும் மருந்தாக தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. வன்னி மரத்தடி விநாயகரை வணங்கினால் வெற்றிகள் வந்து குவியும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது.

விருதாச்சலம் மாவட்டத்தில் விருதகிரி கோவிலில் மிகவும் பழமை வாய்ந்த வன்னி மரம் இன்றும் காணப்படுகிறது. அக்கோவிலில் இருக்கும் கல்வெட்டுகளில் வியர்வை துளிகளையும் பொன்னாக்கும் சக்தி படைத்த இந்த வன்னி மரத்தைப் பற்றிய சில குறிப்புகள் அடங்கியுள்ளது. இக்கோயிலை கட்டிய விபசித்தி என்கிற முனிவர் கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தினமும் வன்னி மர இலைகளை பறித்து கையில் கொடுப்பாராம்.

வியர்வை சிந்தி உழைப்பவர்களின் கையில் இருக்கும் இலைகள் பொன்னாக மாறிவிடும் என்றும், உழைக்காமல் சோம்பேறியாக ஏமாற்றித் திரிபவர்களின் கையில் இலை ஆகவே இருக்கும் என்று கூறியுள்ளார். இத்தகைய அபூர்வ சக்திகள் படைத்த இந்த வன்னி மரம் கங்கை கொண்ட சோழபுரம், தஞ்சை பெரிய கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம், சாத்தூர் மாவட்டம் ஓடைப்பட்டியில் இருக்கும் ஆலயம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சென்னை சைதாப்பேட்டை சௌந்தரேஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. vanni-tree1

ஓடைப்பட்டியில் இருக்கும் வன்னி மரத்தடி பிள்ளையாரை வழிபட்டு புதிய வாகனங்களை எடுப்பது இன்றும் வழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது. இருசக்கர வாகனம் முதல் பெரிய பெரிய கனரக வாகனங்கள் வரை புதிதாக வாங்குபவர்கள் இக்கோவிலில் வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்ட பின்பு தான் வாகனத்தை ஓட்டுகின்றனர். 9 வாரங்கள் வன்னி மரத்தடியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நவக்கிரஹ தோஷங்கள் விலகுவதாக ஐதீகம் உண்டு. தொழில் வியாபாரம் விருத்தி அடையவும், திருமண தடைகள் அகன்று சுபகாரியங்கள் கைகூடவும், குடும்ப அமைதிக்காகவும் வன்னி மரத்தை வழிபடுவது உண்டு.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts