பிந்திய செய்திகள்

தினசரி வாழ்க்கைக்கு, இதோ ஒரு உயர்ந்த ஆலோசனை

வாழ்க்கையை என்னவென்று விவரிப்பது? மகிழ்ச்சியா, புகழ்ச்சியா அல்லது இகழ்ச்சியா? ஏன், நாம் நினைத்தால் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் நெகிழ்ச்சியான தினமாக மாற்றமுடியுமே. “அவனவன் ஒவ்வொரு நாளை எப்படியாவது கழித்தால் போதும் என்றிருக்கிறன்.

இவர் என்னடான்னா நெகிழ்ச்சியா கழிக்கணும்னு வேதம் சொல்றாரு” என உங்களில் சிலர் முனகுவதையும் என் ஞானக் காதுகளில் கேட்க முடிகிறது. நீங்கள் என்னென்ன நினைத்தாலும் அவை உண்மையே, நீங்கள் எதை எதை நம்பினாலும் அவை அப்படியே.

நான் சொல்வது, உண்ண உணவு, உடுக்க உடை, உறைய இடம் இருப்பவர்களுக்குத் தான். அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லை என்பவருக்கோ, ஆயிரம் வாசல் துணிகளை அணிபவருக்கோ அல்ல. இப்படிப் பட்ட கொடுமையான வாழ்க்கை அமைந்தவர்களுக்காக நீங்களும் நானும் பிரார்தனை செய்வோம்.

இந்த கட்டுரையை படிக்கும் அன்பர்கள் மேன் மேலும் முன்னேற்றம் அடையவும், இப்போதைய வாழ்வைவிட மேலும் சிறப்பாக வாழவும் எனது சில கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

மீண்டும் மீண்டும் கேட்ட வண்ணம் இருப்பினும், இதை சொல்லித் தான் ஆகவேண்டும், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வாழ்க்கை ஒவ்வொரு விதமாக அமைகிறது. ஒரே கம்பெனியில் ஒரே மாதிரியான வேலை செய்யும் இரண்டு பேர்களின் வாழ்க்கை ஒரே மாதிரி இருக்காது.

குழந்தை பருவத்தில் மற்றும் இளமையில் ஒருவர் வாழ்ந்த விதம், அவர் குடும்பத்தின் பொருளாதாரம், அவருக்கு கிடைத்த கல்வியின் தரம், உடலுக்கும் உள்ளத்திற்கும் மகிழ்ச்சி மற்றும் ஊக்கம் தரும் செயல்கள், விளையாட்டுகளில் ஈடுபாடு, பள்ளியில் நடைபெறும் கல்வி, கலாச்சாரம், இசை மற்றும் பல்சுவை நிகழ்சிகளில் பங்கு பெறுவது அல்லது அவற்றை கூர்ந்து ரசிப்பது, இவை எல்லாமே ஒருவரின் வருங்காலத்தில் அவர் வாழும் வாழ்க்கையின் தரத்தையும், அமைப்பையும், அவர் சிந்திக்கும் தன்மைக்கும் வித்தாக அமைகிறது. இவை எல்லாம் நீங்கள் அறிந்த பொதுவான செய்தியே.

உணவு கிடைக்கிறது, உடுக்க துணி இருக்கிறது, ஒடுங்குவதற்கு இடம் இருக்கிறது. இவை அமைந்தால் பின் ஏன் வாழ்க்கை நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் ஒரே முக்கிய காரணம், மனம் என்ற கண்ணுக்குத் தெரியாமல் ஆட்டிப் படைக்கும் சக்தி தான்.

இருதயம் சரியாக இயங்கினால், ரத்த ஓட்டமும் சீராக சிறப்பாக இருக்கும். அதைப் போலவே, மனம் நிலையான தன்மையுடன் இயங்கினால், சிந்தனைகளும் செயல்களும் தெளிவாகவும், முரண்பாடுகள் இல்லாமல் இருக்கும். அவ்வப்போது மனம் கொஞ்சம் ஆட்டம் கொடுப்பது இயல்பே ஆனால் அடிக்கடி அல்ல.

மனதை கட்டுப் படுத்தவும், இன்ப துன்பங்களை சமாளிக்கவும், மகிழ்ச்சியில் அதிக நேரம் களித்திடவும் நாம் ஒவ்வொருவரும் நாம் உன்னிப்பாக உணர்ந்தோ, உணராமலோ சில முறைகளைக் கையாள்கிறோம். சிலருக்கு சிரித்த முகம், எந்நேரத்திலும் புன்னகை பூத்த வண்ணம் இருப்பார்கள்.

இவர்களுக்கு பிரச்சினைகளே இல்லை அல்லது குறைவு என்று அர்த்தம் இல்லை. இவர் புன்னகை என்ற அருமையான உபகரணத்தை அவருக்கு ஏதுவாக உபயோகப் படுத்தி, பிர்ச்சினைகளை எதிர் கொள்கிறார் என்று பொருள். இத்தகைய இயல்பு கொண்ட மனிதர்கள் மிகவும் குறைவு என்பதை நாம் அறிவோம்.

இதற்கு நேர் மாராக சிலர் முகம் எப்போது பார்த்தாலும் கவலை வலையினால் பின்னப்பட்டு காணப்படுகிறது. துன்பங்களும் கவலைகளும் இவர்களை மிக எளிதில் பாதிக்கின்றன. பெரும்பான்மையான மக்கள் இந்த இரண்டு குணங்களுக்கும் இடைபட்டவர்களாக இருக்கின்றனர்.

பணம் ,வசதி , உதவுபவர்கள், இவை எல்லாம் ஓரளவுக்கு வாழ்க்கையை அலங்கரித்தாலும், ஒருவரின் மனம் செயல் படும் விதத்தை பொறுத்தே அமைதியோ மகிழ்ச்சியோ அல்லது துயரமோ அதிருப்தியோ அமைகிறது.

ஒவ்வொரு நாளும் விடியும் காலைப் பொழுது , ஒருவரின் வாழ்க்கையையே மாற்றுவதற்கு வழி வகுக்கும் ஆற்றல் கொண்டது. நான், கீழே குறிப்பிடும் சில ஆலோசனைகளை நீங்கள் நடைமுறைப் படுத்த முடிந்தால், நிச்சயமாக உங்களின் வாழ்க்கையின் தரம் மற்றும் சிந்திக்கும் தன்மை உங்களுக்கு அதிகம் நன்மை பயப்பதாக அமையும் என்பது என் திடமான நம்பிக்கை.

சரி, இப்போது இந்த ஆலோசனைகளை வரிசைபடுத்தி கீழே கொடுக்கிறேன். இன்னொரு முக்கிய விஷயம், இந்த மாதிரி பயிற்சியை கூர்ந்த விழிப்புணர்வுடனும், தன்னுணர்வுடனும் செய்தால்தான் பயிற்சியின் பலன்கள் கிட்டும் என்பதை மட்டும் தயவு செய்து நினைவில் கூறுங்கள். சரி இப்போது கீழே வரும் என் ஆலோசனைகளை கொஞ்சம் முழு கவனம் செலுத்தி படிப்பீர்களா?

1. காலையில் சூரிய உதயம் முன்பே எழுவது மிகவும் அற்புதமான வழக்கமாகும். ஆனால் இது சாத்தியமாக வேண்டும் எனில், முந்தைய நாள் இரவு நேரத்துடன் உறங்க வேண்டும். நாலு மணிக்கே எழுந்திரு என்று நான் சொல்லவில்லை.

கதிரவன் ஒளிக்கற்றை உங்களை எழுப்புவதற்கு பதிலாக நீங்கள் கதிரவனை துயில் எழுப்பினால் போதுமானது. ஐந்து மணி, ஐந்தரை மணி அளவில் கண் விழித்தால் போதுமானது. நாலு நாலரை மணிக்கு எழுவார்கள் எனில் மிகவும் அருமையே.

2. முக்கியமான காலைக் கடமைகளை (சூடான காப்பி அருந்துவதும் அடக்கம்) செய்தவுடன் கூடுமானவரை ஒரு அமைதியான இடத்தில் தனிமையில் மௌனத்தில் கண்களை மூடியபடி அமர்ந்து கொள்ள வேண்டும். உங்களின் சுவாசத்தை, அதன் இயற்கையான ஒட்டத்தில் இழுத்து விடுவதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

இதைச் செய்யும் போது உங்களின் கவனம் சுவாசத்தின் மீது மட்டும் இருக்க வேண்டும். இப்படி செய்கையில் உங்களின் எண்ணங்களும் அலைபாயாமல் இருக்கும். இந்த மூச்சு பயிற்சி நம்மில் நம்மை மிகவும் அருகாமையில் காண்கிறது போன்ற அனுபவத்தை கொடுக்கும், முழு மனதுடன் செய்திடில்.

3. அதன் பின், தைரியமும் துணிச்சலும் நம்மிடம் முழுமையாக உள்ளதா என்பதை தோராயமாக கணித்து, குறைவாக இருப்பின் அதை மானசீகமாக கூட்டிக் கொள்ள வேண்டும். சுலபமாக புரியுமாறு சொல்ல வேண்டும் என்றால் நம் தைரியத்தையும், துணிச்சலையும் recharge செய்ய வேண்டும். மனா ரீதியாக நமக்கு அதிகமான தைரியமும் துணிவும் இதனால் கூடிடும்.

4. மேற்கூறிய ரீசார்ஜ் நடக்கையில் கீழ்வரும் சிந்தனைகளை மனதில் ஓட விடலாம்.
நீங்கள் மிகவும் பக்தியும் மரியாதையும் வைத்துள்ள மாகன்களை, உயர்ந்த மனிதர்களை, நீங்கள் குருவாக மதிக்கும் மனிதர்களை மானசீகமாக நினைவில் நிறுத்தி, அவர்களின் அலாதியான பண்புகளை நினைவுறுத்தி, மனதார அவர்களை போற்ற வேண்டும். இத்தகைய மனிதர்கள் ஆன்மீகவாதியாக இருப்பின் மிகவும் நல்லது.

ஏனெனில் மாபெரும் ஆன்மீக வியாதிகளின் நினைவே நமக்கு நேர்மறை சக்தியை அதிகரிக்கும். உடன் அமைதியும் வெளிப்படும். அப்படிப்பட்ட மனிதர்கள் இல்லயெனிலும் நீங்கள் உங்களுக்கு உகந்த தெய்வத்தை மனதில் வைக்கலாம். எதுவும் இல்லையெனில் இந்த பகுதியினை விட்டு விடலாம். ஒருவரின் நம்பிக்கையை பொறுத்துதான் இத்தகைய சிந்தனைகள் அமையும்.

5. பின் கண்களை மெல்லத் திறந்து, அருகில் கண்ணுக்கு தெரியக் கூடிய இயற்கை காட்சிகளை காணலாம். சூரிய உதயம், ஆகாயம், மரங்கள், செடி கொடிகள், பறந்து செல்லும் பறவைகள், வண்ணத்து பூச்சிகள், என்னென்ன இயற்கை காட்சிகள் தெரிகிறதோ அவற்றை முழு மனதுடன் பார்த்து ரசிக்கலாம்.

இதனால் நம்முள் உற்சாகமும் ஊக்கமும் பிறக்கும். ஒரு நாளில் நாம் அதிகமாக செயற்கையாகத்தான் வாழ்கிறோம்.எனவே சிறிது நேரமாவது இயற்கையுடன் இருப்பது மனதுக்கு மிகவும் குதூகலம் தரும்.

6. பிறகு, தைரியமும் துணிச்சலும் 100% நிரப்பப்பட்டுவிட்டது என்று நம்ப வேண்டும். நம்பிக்கை சாதாரண விஷயம் அல்ல அது மாபெரும் சக்தி, கடவுள் கூட. நான் இன்று எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னனால் இன்று நீங்கள் சந்தோஷமாக வாழ விரும்புகின்றீர்களா அல்லது உற்சாகமின்றி கவலையுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களா, இந்த இரண்டில் ஒன்றை தீர்மானமாக முடிவு செய்து கொள்ள வேண்டும். இந்த இரண்டில் எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் தான் நிச்சயிக்க வேண்டும்.

7. மேற்கூறிய செயல்களைச் செய்ய குறைந்தது 15 நிமிடங்கள் ஒதுக்கினால் தான் செய்யும் பலன் கிட்ட வாய்ப்பு உள்ளது. 30 நிமிடம் வரை என்றால் இன்னும் அருமை. உங்களின் மூச்சை கவனத்துடன் நோக்க 10 நிமிடங்கள் ஒதுக்கினால் அது நல்ல பயனுள்ளதாக இருக்கும்.

இவைகளை செய்த பின் உங்களின் அன்றாட வாழ்க்கையை எதிர்கொண்டால் உங்களின் கவனம் அதிகரிக்கும். கோபம் வருவது குறையும். நடப்பவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் அதிகரிக்கும்.

என் ஆலோசனை இவ்வளவு தான். இதன் பிறகு நீங்கள் உங்களின் அன்றாட அலுவல்களில் ஈடுபடலாம். இதைச் செய்யும் பாணியை நீங்களே தேர்ந்தெடுக்கலாம். நான் சொல்பவை பொதுவாக ஓரளவுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அதிகம் பொருந்தும். ஆனால் ஆன்மீக ஈடுபாடு இல்லாதவர்களும் கூட இதில் அவர்களுக்கு பொருந்தக் கூடியவைகளை வடிகட்டி, அவர்களின் அணுகுமுறைகளில் இந்த நித்திய விழிப்புணர்ச்சி பயிற்ச்சியை செய்யலாம்.

நான் மீண்டும் வலியுறுத்தும் விஷயம் ஒன்று தான். நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்ய வேண்டும். வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது இந்த பயிற்சியை செய்ய வேண்டும். இரண்டு வாரத்திலிருந்து ஒரு மாதத்திற்குள், மனமுவந்து இந்த பயிற்சியை செய்தால் பலனை கண்ணால் பார்க்க முடியும். மனதால் உணர முடியும்.

எப்படி தினமும் இரண்டு இரண்டரை லிட்டர் நீர் பருகினால் உடலுக்கு நன்மையோ மேற்கூறிய பயிற்ச்சியை தினம் செய்திடில் மனதுக்கு மிகவும் மகிழ்சியும் அமைதியும் கலந்த பயன் கிட்டும் என்பதில் ஐயமில்லை.

ராமசுப்பிரமணியன்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts