பிந்திய செய்திகள்

வாழ்வில் சிறக்க வாசிப்பின் முக்கியத்துவம்.

ஓர் அறிவு ஜீவியை சந்திக்க நேர்ந்தால், அவரிடம் நீங்கள் எந்தெந்த வகையான புத்தகங்களை வாசிக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்க வேண்டும் என்று அறிஞர் ரெல்ப் வால்டோ எமர்சன் கூறியுள்ளார். அந்த அளவுக்கு ஒருவரின் ஆளுமையை வசீகரமாக்கக்கூடியது தான் வாசிப்பு. புத்தகமில்லாத வீட்டில் எவ்வகையான வாழ்க்கையை உங்களால் வாழ முடியும் என்று அறிஞர் ஒருவர் கேட்டுள்ளார்.

உண்மையில் வீட்டை அலங்கரிக்கப் புத்தகங்களை விட அழகானதும் சிறந்ததும் பயனுள்ளதுமான பொருள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. வாசிப்பு பழக்கமானது ஒரு வளமான வாழ்க்கையைத் தரவல்லது என்பதை விளக்கிட அதிக சான்றுகள் தேவையில்லை.

வாசிப்பு என்பதன் பொருள் எவ்வாறு புரிந்து கொள்ளப்படுகிறது என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவது மிக அவசியம். சாதாரணமாக பாடசாலையில் கற்கும் மாணவர்கள் பாடங்களை வாசிப்பதும் வாசித்து அதன் பொருளைப் புரிந்து கொள்வதும் அதன் பின்னர் பாடங்களின் பின்னால் உள்ள கேள்விகளுக்கான விடைகளை வாசிப்பதும் அதை மனனம் செய்வதும் இவற்றையே பலரும் வாசிப்பு என்பதற்கான பொருளாகக் கொள்கின்றனர்.

ஆனால் வாசிப்பு என்பது இவற்றோடு மாத்திரம் தொடர்புடையதல்ல. வாசிப்பு என்பதற்கு பாடசாலைக் கற்றலைத் தாண்டி பல்வேறு பரிமாணங்கள் உள்ளன. ஒரு சிறந்த வாசகராவது என்பது எளிதான விடயமல்ல. வாசிப்பின் பின்னணியிலுள்ள கண், மூளை இவற்றின் செயல்பாடுகளைப் புரிந்துகொண்டால் இதனை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

உலக மொழியியல் அறிஞர்கள் வாசிப்பை புதிய புதிய கோணங்களில் தற்போது அணுகத் தொடங்கியுள்ளனர்.

ஒரு சிறந்த வாசகர் வாசிக்கும்போது ஒரு புத்தகத்தில் ஒரு பக்கத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வார்த்தையையும் எழுத்துக்கூட்டி வாசிப்பதில்லை. அதற்கு மாறாக, ஒவ்வொரு வார்த்தையும் அவர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான சித்திரமாக அவர்களின் மூளையில் பதியப்பட்டுள்ளன.

அவற்றை எழுத்துக்கூட்டாமலே வாசித்துவிட்டு, அடுத்தடுத்து வரக்கூடிய வார்தைகளைச் சரியாக ஊகித்து நிரப்புதல் என்ற வகையில்தான் வாசித்தல் செயல்பாடு இடம்பெறுகிறது. இவ்வாறு வாசிக்கும் போது வேகமாக வாசிக்க முடியும்.

பொதுவாக வாசிப்பு முறை இரு வித மாகச் செயல்படுகின்றது. ஒன்று ஒரு குறிப்பிட்ட பந்தியைப் பொருள் புரியும் வகையில் ஆழ்ந்து வாசித்தல். மற்றையது மேலோட்டமாக வாசித்தல் என்பனவே அவையாகும். இந்த இரண்டு வகையான வாசிப்பு முறையையும் கடைப்பிடிக்காத வாசிப்பாளர்கள் இருக்க இயலாது.

குறிப்பாக, பாடசாலையில் பாடங்களை ஆசிரியர்கள் கற்பிக்கும்போது முதல் வகையான வாசிப்பும், பரீட்சைக்குத் தயாரான பின்னர் மாணவர்கள் குறிப்பிட்ட விடையைக் கண்டுபிடிப்பதை இரண்டாவது வாசிப்புக்கும் உதாரணங்களாகக் கூறலாம்.

ஆனால், எப்படி தகுதிமிக்க வாசகராவது? என்பது குறித்து ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு விஷயத்தைக் கற்பதற்கு நேரம் ஒதுக்கி அதில் ஈடுபாடுகாட்டி பயிற்சி பெறுகிறோமோ அதுபோலவே வாசிக்கும் பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.

சிறுசிறு பந்திகளை, சிறுகதைகளை முதலில் கொஞ்சம் நேரம் ஒதுக்கி வாசிக்க வேண்டும். அதன் மூலம் வாசிப்பின் ருசியை உணர்ந்து கொள்ள முடியும். குறிப்பாக விருப்பமான எழுத்தாளர் அல்லது கவிஞரின் புத்தகங்களைத் தொடர்ந்து வாசிப்பதன் ஊடாக வாசிப்பின் வேகத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.

இதன் ஊடாக ஒருவர் விரும்பக்கூடிய துறை சார்ந்த பல்வேறு சொற்களை அறிமுகமான பிம்பங்களாக மாற்றிக் கொள்ளலாம். இது மிகவும் அவசியமானது. இவ்வாறு பல்வேறு வார்த்தைகள் ஒருவருக்கு அறிமுகமான பிம்பங்களாக மாறும் போது, இடையில் அமைந்திருக்கக்கூடிய வார்த்தைகளை சரியாக ஊகித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இவ்வாறு தொடர்ந்து மேற்கொள்ளும் போது தகுதிமிக்க வாசகரா கலாம். இதற்கான வாய்ப்பு பாடசாலைப் பாடநூல்களின் ஊடாகப் பெரும்பாலும் கிடைக்கின்றன. வாய்ப்புகளையும் நேரத்தையும் சரியாக பயன்படுத்திக்கொண்டால் யாராலும் சிறந்த வாசகராகலாம்.

என்றாலும் வாசிப்புத் திறன் பெற்றுள்ள பலரும் தாங்கள் வாசிக்க இயலாமைக்கான காரணமாகக் கூறுவது, ‘எனது வாழ்க்கையின் அவசரகதியில் எனக்கு வாசிப்பதற்கு நேரமே இருப்பதில்லை’ என்பதுதான். இக்கூற்றில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் நியாயம் இருக்கலாம். ஆனால், ஒருவர் அவரது வாழ்வில் பலமணி நேரங்களை விரயமாகச் செலவிட வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகின்றனர்.

குறிப்பாக, பஸ் தரிப்பு நிலையங்களில் காத்திருக்கும் நேரம், பயணச் சீட்டு முன்பதிவு நிலையங்கள், மருத்துவமனையில் மருத்துவரைச் சந்திக்கும் வரை காத்திருக்கும் நேரம் மற்றும் வங்கி, அஞ்சல் அலுவலம் போன்ற இடங்களிலெல்லாம் ஒரு குறிப்பிட்ட நேரகாலமாக வெறுமையாக செலவிட நேர்கிறது.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரு புத்தகம் இருந்து வாசித்தால் பல பக்கங்களை வாசிக்கக்கூடியதாக இருக்கும். வாசிப்பதற்கு நேரம் இல்லை என்று கூறுவதைவிட எந்தெந்த நேரங்களில் வாசிக்க முடியும் என்பதைக் கண்டுபிடிப்பதே முக்கியம். ஜப்பான் போன்ற நாடுகளில் ரயில், பஸ் வண்டிகளில் பலரும் வாசித்துக்கொண்டே பயணிப்பதை அவதானிக்கலாம்.

ஆகவே வாசிப்பை நேசிக்கும் போது ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும். அத்தோடு பல்வேறு அறிஞர் பெருமக்களோடு நேரத்தை செலவிட்ட நிறைவும் கிடைக்கப்பெறும். சக மனிதர்களுடன் உரையாடுவதன் மூலம் இன்றைய சமூகம் குறித்த பல்வேறு கருத்துக்களை மட்டுமே அறிந்து கொள்ள இயலும்.

ஆனால், ஏற்கனவே சாதனை புரிந்த அறிஞர்கள் தம் வாழ்வின் பல்வேறு அனுபவங்களை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அவற்றைப் படிப்பதன் மூலம் அந்த அறிஞர்களுடன் உரையாடக்கூடிய அரிய வாய்ப்பை புத்தக வாசிப்பு பெற்றுத்தரும். அவ்வாறான மகத்துவம் மிக்க வாசிப்பை நேசித்து வாழ்வில் முன்னேற முயற்சி செய்ய வேண்டும். அது பெரிதும் பயன்மிக்கதாக இருக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts