நாட்டில் சுற்றுசூழல்,காற்று மாசுபாடு மற்றும் மேலும் பல காரணிகள் காரணமாக சைக்கிள் பாவனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
சைக்கிள் ஓட்டுவதற்காக ஒவ்வொரு வீதியிலும் ஒரு மருங்கை ஒதுக்குவதுடன், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சில ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குவதற்கான ஒழுங்குமுறை திட்டத்தையும் அமைச்சர் அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம்,போக்குவரத்து நெரிசல் உள்ள போது பயணிக்கும் ஒரு வாகனத்திற்கு கிலோமீட்டருக்கு 103.56 ரூபாவை செலவிட வேண்டியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
சைக்கிள் பாவனையினால்,காற்று மாசுபாட்டை குறைத்தல், நேர விரயத்தை தடுத்தல் போன்று தொற்றாத பல நோய்களை கட்டுப்படுத்த உதவும் என தெரிவித்த அமைச்சர், சைக்கிள் பாவனையை ஊக்குவிப்பதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அத்துடன் சைக்கிளை பயன்படுத்துவதன் மூலம் ஒரு கிலோ மீற்றருக்கு 236.48 ரூபாவை மிச்சப்படுத்த முடியும் எனவும் அரசாங்கத்திற்கு 339.98 ரூபா இலாபம் கிடைக்கப்பெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் அரசாங்கத்தின் உதவியை நாடவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை அடுத்த வருடத்திற்குள் மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.