அறுவை சிகிச்சையின்போது இளையராஜாவின் பாடலை பாடிய பெண் !

இந்தியாவில் அறுவை சிகிச்சையின்போது பெண் ஒருவர் இளையராஜாவின் பாடலை பாடிய சம்பவம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. சென்னையை சேர்ந்தவர் சீதாலட்சுமி. கர்நாடக சங்கீத பாடகியான இவர் பாடல் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு இவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது மருத்துவ பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

இதன்போது அவரின் பயத்தை குறைப்பதற்காகவும் மருத்துவர்கள் பாடலை ஒலிக்க செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை நடைபெறும் போது, மருத்துவர்களிடம் சீதாலட்சுமி இயல்பாக பேசியுள்ளார். அதன்பின் பயத்தை போக்குவதற்காக மருத்துவர்கள் அவரிடம் ஒரு பாட்டு பாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

உடனே கேளடி கண்மணி படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த ‘கற்பூர பொம்பை ஒன்று’ பாடலை சீதாலட்சுமி பாடியுள்ளார். தற்போது சிகிச்சை முடிந்து நலமாக சீதாலட்சுமி வீடு திரும்பி இருக்கிறார். அவருக்கு மருத்துவர் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.

அப்போது பேசிய சீதாலட்சுமி, ‘புற்று நோயிலிருந்து குணமடைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே தரமணியில் இருக்கும் தனியார் மருத்துவமனை அருகே உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.

எனக்கு சிகிச்சை செய்து கொள்வதற்கு மிகவும் பயமாக இருந்தது. புற்றுநோய் பாதித்த போது என்னால் சரியாக கூட பேச முடியாது. அறுவை சிகிச்சைக்கு சென்ற போது எனது உடல்நிலை காரணமாக மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

அதனால் வலியை எப்படி தாங்குவது என்ற பயம் எனக்குள் ஏற்பட்டது. அப்போதுதான் வலியை தாங்கிக்கொள்ள மருத்துவர்கள் என்னைப் பாடச் சொன்னார்கள்.

நான் பாடல் ஆசிரியராக இருந்ததால் இளையராஜாவின் ‘கற்பூர பொம்மை ஒன்று’ என்ற பாடலை பாடினேன். உலகத்திலேயே புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது பாடல் பாடிய அறுவை பெண் என்று சொல்லும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது’ என சீதாலட்சுமி கூறியுள்ளார்.

உலகத்திலேயே மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது பாடல் பாடிய முதல் நபர் இவர்தான் என அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

Exit mobile version