Home உலகம் இந்தியா இந்தியாவில் நீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடியது மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்தியாவில் நீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடியது மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0

நீட் விலக்கு சட்டமூலத்தை ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், நீட் விலக்கு சட்டமூலத்தை மீண்டும் நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கூடியது.

கூட்டத்தில், நீட் விலக்கு சட்டமூலத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். பின்னர் சட்டமூலம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

இதன்போது, நீட் விலக்கு சட்டமூலம் மீது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதற்காக மட்டும் நாம் இங்கு கூடவில்லை. கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டவும் கூடியிருக்கிறோம். ஜனநாயகம் காக்க, கல்வி உரிமையை வென்றெடுக்க, கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட நாம் இன்று கூடியிருக்கிறோம்.

அந்தகவையில், எனது பொதுவாழ்வில் மறக்கமுடியாத நாளாக இந்நாள் அமைந்துள்ளது. நீட் என்ற சமூக அநீதியை அகற்ற இந்த சட்டப்பேரவையால் முடியும்.

தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்று 8 மாதத்துக்குள் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூடியிருக்கிறோம். 1968ல் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டி இருமொழிக்கொள்கை நிறைவேற்றினார் அண்ணா.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும். 8 கோடி மக்களை பிரதிபலிக்கக்கூடிய இந்த சட்டப்பேரவையில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும்.

நீட் தேர்வு ஒன்றும் அரசியலமைப்பு விதிப்படி உருவாக்கப்பட்டது அல்ல. நீட் தேர்வு கொண்டுவரப்பட்டபோது, 115 வழக்குகள் போடப்பட்டது, அதில் தமிழகம்தான் முதன்மை மாநிலம்.

அதன்படி, நீட் தேர்வு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் கூறியது. இதனால், தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், 2016ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பை மாற்றி வழங்கியது. இதன்பின்னர் நீட் தேர்வை பாஜக அரசு அமுல்படுத்தியது. நீட் தேர்வு முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு சாதகமானது. இதற்காக இலட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர். தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்டது என்று சொல்லாம்.

நீட் தேர்வு மாணவர்களிடையே மருத்துவக் கனவில் தடுப்புச் சுவரை எழுப்புகிறது. உனக்கு தகுதி இல்லை என்று தடுக்கிறது.

நீட் தேர்வில் முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 2019 தேர்வில் 4 பேர், 2020ல் 5 பேர், 2021ல் 15 பேர் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் தேர்வு முறைகேடு வழக்கு போடப்பட்டுள்ளது.

பல்வேறு குளறுபடிகளுடன் ஏழை? எளிய மாணவர்களிடையே தகுதி என்ற பெயரில் ஓரங்கட்ட கொண்டுவரப்பட்ட தேர்வுதான் நீட் தேர்வு.

மாணவர்களை கொல்லக்கூடிய தேர்வு, அது ஒரு பலிபீடம். அரியலூர் அனிதா உள்ளிட்ட மாணவச் செல்வங்களை நாம் நீட் தேர்வில் இழந்திருக்கிறோம். இந்திய மாணவர்களையும் பலி கொடுத்திருக்கிறது

நீட் தேர்வு குறித்து ஒட்டுமொத்த சமுதாயமும் மாணவர்களின் பெற்றோர்களின் நிலைப்பாட்டையே அரசு முன்வைத்திருக்கிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version