உடலுக்கு ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டை பெரும்பாலும் இப்போது நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதே கிடையாது. பூண்டு குழம்பு, புளி குழம்பு வைத்துவிட்டு அதற்கு தொட்டுக்கொள்ள இப்படி ஒருமுறை வாழைத்தண்டு கூட்டு செய்து பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். இதை செய்வதில் பெரியதாக எந்த கஷ்டமும் கிடையாது. வாழை தண்டை வெட்டி வைத்துக் கொண்டால் பத்தே நிமிடத்தில் கூட்டு தயார்.
மீடியம் சைஸில் இருக்கும் வாழைத் தண்டை வெட்டி அதன் உள்ளே இருக்கும் நாரை நீக்கி விட்டு தண்ணீரில் போட்டு தயாராக வைத்துக்கொள்ளுங்கள். பாசி பருப்பை கழுவிவிட்டு தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 3, கீறிய பச்சை மிளகாய் – 2, இந்த பொருட்களை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1 சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, வெட்டி வைத்திருக்கும் வாழைத்தண்டை குக்கரில் போட்டு விடுங்கள். அதன் பின்பு மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், தண்ணீர் இரண்டு டம்ளர் ஊற்றி, உப்பு தேவையான அளவு போட்டு, நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி விடுங்கள்.
அவ்வளவு தான். மிதமான தீயில் 2 விசில் வைத்தால் போதும். எல்லா பொருட்களும் வெந்து குழைந்து சூப்பராக நமக்கு கிடைத்துவிடும். உங்களுக்கு இந்தக் கூட்டு கொஞ்சம் தளதளவென இருக்க வேண்டும் என்றால் அப்படியே விட்டு விடுங்கள். அப்படி இல்லையென்றால் அடுப்பை மீண்டும் பற்ற வைத்து குக்கரை திறந்தபடி கூட்டில் இருக்கும் தண்ணீரை நன்றாக சுண்ட வைத்துக்கொள்ளுங்கள். கூட்டு திக்காக நமக்கு கிடைக்கும். இறுதியாக ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவலை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள்.
இதற்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம் – 1/2 ஸ்பூன், நான்கு துண்டுகளாக கிள்ளிய வரமிளகாய் – 2, கருவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 பல், இந்த எல்லா பொருட்களையும் போட்டு நன்றாக வதக்கி விட வேண்டும். அதாவது சின்ன வெங்காயம் பிரவுன் கலர் வரும் வரை வதக்கி இந்த தாளிப்பை அப்படியே கூட்டில் கொட்டி கலந்து சுட சுட சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும்.
இந்தக் கூட்டை சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். அல்லது குழம்பு சாதத்துக்கு சைட் டிஷ்ஷாக தொட்டும் சாப்பிட்டுக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்தான். சுவையான இந்த வாழைத்தண்டு கூட்டு ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.