சூப்பரான வெங்காய போண்டா செய்வது எப்படி?

எண்ணெய் கொஞ்சமும் குடிக்காத செக்கசெவந்த மொருமொறு வெங்காய போண்டா டீயுடன் சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். இதற்காக டீக்கடை எல்லாம் தேடிப் போய் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. நம்ம வீட்டிலேயே பத்து நிமிடத்தில் மொறு மொறுவென்று வெளியேயும், உள்ளே மெத்தென்றும் வெங்காய வாசத்துடன் வெங்காய போண்டா எளிதாக சுவையாக எப்படி செய்வது? என்பதை பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் – நான்கு

கடலை மாவு – அரை கப்

அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்

வெறும் மிளகாய்த்தூள் – அரை டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

உப்பு – தேவையான அளவிற்கு

கறிவேப்பிலை – ஒரு கொத்து.

செய்முறை:

வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்

மொறு மொறுவென்று வெங்காய போண்டா செய்ய முதலில் நான்கு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து மெல்லியதாக நீள நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை நன்கு கைகளால் பிசைந்து கொடுத்து உதிர்த்துவிட்டு கொள்ளுங்கள்.

பின்னர் இதனுடன் கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவின் படி கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து விட்டு பின்னர் வெறும் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்.

காரத்திற்கு இந்த மிளகாய்த் தூளுடன், 2 பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.

பச்சை மிளகாய் வாசம் வந்தால் தான் வெங்காய வடை சூப்பராக இருக்கும். வாய்வு நீக்க கால் டீஸ்பூன் அளவிற்கு பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இவற்றுடன் ஒரு கொத்து பச்சையாக இருக்கும் கறிவேப்பிலையை அப்படியே கழுவி நறுக்கி பொடிப் பொடியாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இவை எல்லாவற்றையும் நன்கு கலந்து தேவையான அளவிற்கு தண்ணீர் தெளித்து கொள்ளுங்கள்.

தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது, உருண்டை பிடிக்க ஏதுவானதாக வரும் அளவிற்கு லேசாக தெளித்து தெளித்து கலந்து விடுங்கள்.

உப்பு, காரம் எல்லாம் ஒன்றுடன் ஒன்றாக கலந்து நன்கு உருண்டை பிடிக்கும் அளவிற்கான பதம் வந்ததும் உருண்டை உருண்டையாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

போண்டா செய்வதற்கு ஏற்றவாறு எண்ணெய் ஊற்றி காய விடுவது நல்லது.

எண்ணெய் நன்கு காய்ந்து கொதித்து வரும் பொழுது அடுப்பை மீடியமாக வைத்து கொண்டு ஒவ்வொரு உருண்டைகளையும் போட வேண்டும்.

ஒரு புறம் நன்கு சிவக்க வரும் வரை வேடிக்கை பார்க்காமல் எல்லா புறமும் நன்கு திருப்பி விடுங்கள்.

எல்லா புறத்திலும் நன்கு செக்கச்செவேலென்று சிவந்து வர வேண்டும்.

பொறுமையாக ஒவ்வொன்றையும் சரியான நேரத்தில், சரியான பதத்தில் வேகவிட்டு எடுத்து ஒரு டிஷ்யூ பேப்பரில் பரிமாறுங்கள்.

சுடச்சுட இந்த அற்புத வெங்காய வடை அல்லது வெங்காய போண்டா உடன் தொட்டுக் கொள்ள கொஞ்சம் கெட்டித் தேங்காய் சட்னி இருந்தால் அசத்தலாக இருக்கும்.

நீங்களும் இதே முறையில் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து அசத்தி விடுங்கள்.

Exit mobile version