வவுனியா வைத்தியசாலையில் கடந்த 6 வருடங்களில் பதிவான அதிக மரண எண்ணிக்கை இதுவாகும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரப்பட்ட வினாவிற்கு தற்போது வெளிநாட்டு கற்கைநெறியொன்றுக்காக செல்லும் வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கே.ராகுலன் அவர்களின் பதவி முத்திரையுடன் பெறப்பட்ட தகவலிலேயே இந்த அதிர்ச்சி புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான விபரம் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரால் கோரப்பட்டிருந்தது.
அதில் கடந்த 2015 ஆம் ஆண்டு 45 குழந்தைகளும், 2016 ஆம் ஆண்டு 47 குழந்தைகளும், 2017 ஆம் ஆண்டு 45 குழந்தைகளும், 2018 ஆம் ஆண்டு 58 குழந்தைகளும், 2019 ஆம் ஆண்டு 52 குழந்தைகளும், 2020 ஆம் ஆண்டு 48 குழந்தைகளும், 2021 ஆம் ஆண்டு 73 குழந்தைகளும் மரணமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு மரணமடைந்த குழந்தைகளில், 2021 ஆம் ஆண்டு குழந்தை பிறக்கும் முன் அல்லது பிறக்கும் போது விடுதி 5 இல் 8 குழந்தைகளும், விடுதி 7 இல் 16 குழந்தைகளும், குழந்தை பிறந்த பின் விடுதி 7 இல் 3 குழந்தைகளும், குழந்தைகளுக்கான விசேட அவசர சிகிச்சைப் பிரிவில் 46 குழந்தைகளுமாக 73 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். கடந்த 6 வருடங்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் அதிகரித்த சிசு மரணமாக இது பதிவாகியுள்ளது.
அத்துடன், மொத்த சிசு மரணங்களிலும் 2021 ஆம் ஆண்டே அதிக இறப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை சுகாதார, மருத்துவ துறையானது வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையிலும், வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலும் 73 குழந்தைகள் 12 மாதங்களில் இறந்துள்ளமை பெரும் அதிர்ச்சியளிப்பதாக வவுனியா சிவில் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் குழந்தை மரணமடைந்தமை தொடர்பில் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.