கனமழையால் பிரேசில் : நிலச்சரிவு,வெள்ளப்பெருக்கு 90க்கும் மேற்பட்டோர் மரணம்!

தென் அமெரிக்க நாடான பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் நேற்று முன்தினம் முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. 30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி நேரத்தில் பெய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பிரேசிலில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக மலைப்பகுதியான பெட்ரோபொலிஸ் உள்ளிட்ட நகரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் வெள்ளக்காடாக மாறிவிட்டன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை வெள்ளம் அடித்து சென்றது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

நூற்றுக்கணக்கான கால்நடைகளும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டன. அதே போல் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின. பலத்த மழை எதிரொலியாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.நதிகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம், நூற்றுக்கணக்கான கிராமங்களை தனி தீவுகளாக்கிவிட்டன.

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனவர்களை பேரிடர் மேலாண்மை படையினர் தேடி வருகின்றனர். கொட்டும் மழைக்கு இடையே மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

இதனிடையே ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ, ரியோ டி ஜெனிரோ மழை பாதிப்பு குறித்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் “பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கடவுள் ஆறுதல் அளிக்கட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்குமாறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version