மன்னாரில் அரிய வகை ஆமைகள் மீட்பு!

நேற்று (23) மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் கடலில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கடலாமைகள் இரவு மன்னார் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் துல்ஸன் நாகவத்தயின் பணிப்புரையின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானக்கவின் கண்காணிப்பில் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி குமார பல்லேவெல தலைமையிலான குழுவினர் மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (23) இரவு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த வீட்டின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அரிய வகை கடல் ஆமைகள் 5 பொலிஸாரினால் மீட்கப்பட்டது.

குறித்த ஆமைகள் அரிய வகை பேராமை இனத்தை சேர்ந்தவை என்பதுடன் ஒவ்வொரு ஆமையும் சுமார் 100 கிலோ எடை கொண்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் குறித்த வீட்டில் சந்தேக நபர்கள் எவரும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கடலாமைகள் பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு கடலில் விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் குறித்து மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version