யாழ் மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் முகமாக
யாழ் குடாநாட்டின் சுற்றுலா பயணிகளின் எண்ணங்களை நிறைவேற்ற “விக்டோரியா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்” மற்றும் “லியானா கடல் உணவு” தனியார் முன்னெடுத்துள்ளசுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் உல்லாசத்துறை ஆடம்பர படகு சேவையின் வெள்ளோட்ட நிகழ்வு இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடல் சுற்றுலா படகான “விக்லியா” படகின் வெள்ளோட்ட நிகழ்வு இன்றையதினம் குருநகர் இறங்கு துறையில் நடைபெற்றது.
இந்த உல்லாசப்படகின் வெள்ளோட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த திட்டத்தை முதலீடு செய்து முன்னெடுத்து முயற்சியாளர்களுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த உல்லாச சேவையின் மேம்பாட்டை முன்னெடுப்பதற்கு இப்பகுதி மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதை மேலும் விரிவாக்கம் செய்து பலதரப்பட்ட பிரதேசங்களிலிருந்தும் குறிப்பாக வெளிநாட்டு உல்லாச பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருவதை ஊக்கப்படுத்தும் வகையிலான மேம்படுத்தப்பட்ட செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்கு தம்மாலான ஒத்துழைப்புக்ளையும் வழங்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, சுற்றுலாப் பயணிகளுக்கான குறித்த நவீன வசதிகளுடன் கூடிய ஆடம்பர குளிரூட்டப்பட்ட உல்லாசப் படகு சேவையானது யாழ் நகரை அண்டிய சிறு தீவிலிருந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.