குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கொட்டி சாப்பிடும் இந்த பொட்டுக்கடலை வெங்காய சட்னி இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ரொம்பவே அட்டகாசமாக இருக்கும். எல்லா சுவையும் சேர்ந்து இருக்கும் இந்த சட்னி ரொம்பவே ஸ்பெஷல்! சுவையான பொட்டுக்கடலை வெங்காய சட்னி எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.
பொட்டுக்கடலை வெங்காய சட்னி செய்ய தேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய் – இரண்டு, பச்சை மிளகாய் – ஒன்று, பெரிய வெங்காயம் – மூன்று, கறிவேப்பிலை ஒரு கொத்து, பெரிய தக்காளி – ஒன்று, கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி, புதினா இலைகள் – அரை கைப்பிடி, பூண்டு – 5 பல், தேங்காய்ப்பூ அரை கப், புளி – சிறுநெல்லி அளவு, இஞ்சி – ஒரு இன்ச், பொட்டுக்கடலை ஒரு டீஸ்பூன், தாளிக்க: சமையல் எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு -அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வரமிளகாய் – ஒன்று.
பொட்டுக்கடலை வெங்காய சட்னி செய்முறை
முதலில் தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சுத்தம் செய்து தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். கொத்தமல்லி தழை, புதினா இலைகளை ஆய்ந்து நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் வரமிளகாய் 2, பச்சை மிளகாய் ஒன்று சேர்த்துக் கொள்ளுங்கள். 2 மிளகாய் சேர்ப்பதால் இரண்டின் சுவையும் அதில் ஒரு சேர இறங்கும்.
பிறகு பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வதங்கி வர, ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டுகளையும் சேர்த்து நன்கு வதங்கி வரும் பொழுது, நீங்கள் ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துள்ள கொத்தமல்லி தழை மற்றும் புதினா இலைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் சுருள வதக்கி வரும் பொழுது ஐந்து பூண்டுப் பற்களை தோலுரித்து சேருங்கள். பூண்டு அதிகம் வதக்கக் கூடாது. பின்னர் பூ போல துருவி வைத்துள்ள தேங்காய் துருவல் அரை கப் சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கியும் சேர்க்கலாம்.
உங்களுக்கு புளிப்பு சுவை தேவை என்றால் சிறு நெல்லிக்காய் அளவு புளி சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் அதை விட்டு விடலாம், அது ஆப்ஷனல் தான். பின்னர் ஒரு இன்ச் அளவிற்கு இஞ்சியை நறுக்கி சேருங்கள். இஞ்சியின் சுவை இந்த சட்னிக்கு இன்னும் சுவை தரும். லேசாக வதக்கி விட்டு பின்பு கடைசியாக ஒரு டீஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து நமத்து போய்விடாமல் அடுப்பை அணைத்து விடுங்கள். பின்பு இவை ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொண்டு, அதில் இவற்றை சேர்த்து அதிகம் நைஸாக இல்லாமல் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் தாளிக்க ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வர மிளகாய் ஆகியவற்றை கிள்ளி சேர்த்து தாளித்து சட்னியுடன் கொட்டி இறக்கினால் கமகமவென பொட்டுகடலை வெங்காய சட்னி தயார்