அதிக அளவில் வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ள ‘வெந்தயக்கீரை’ உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. வீட்டிலேயே சிறிய தொட்டியில் சிறிதளவு வெந்தயத்தை விதைத்து வைத்தால் மடமடவென வெந்தயக்கீரை முளைக்க ஆரம்பித்துவிடும். வெந்தயக்கீரை கடைகளிலும் கிடைக்கப் பெறுகின்றன. இந்த கீரையை வைத்து அட்டகாசமான சுவையில் புலாவ் செய்து பார்த்தால் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். வித்தியாசமான சுவையுடைய ‘வெந்தயக்கீரை புலாவ்’ சுலபமாக நம் வீட்டிலேயே எப்படி செய்வது? என்பதைத் தெரிந்து கொள்ள நீங்களும் தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
வெந்தயக்கீரை புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி ரைஸ் – 1/2 kg,
பட்டை – 2,
கிராம்பு – 4,
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
ஏலக்காய் – 2,
அண்ணாச்சி பூ – 1,
மராத்தி மொக்கு – 4,
பிரியாணி இலை – 3,
வெங்காயம் – 1 ( நீளவாக்கில் நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4,
தக்காளி – 4,
பட்டாணி – (ஒரு கைப்பிடி அளவிற்கு ஊற வைத்தது),
வெந்தயக்கீரை – (ஒரு கைப்பிடி அளவிற்கு)
தேங்காய் பால் – 1 கப்,
நெய் – 1 டேபிள்ஸ்பூன்,
சமையல் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவிற்கு.
வெந்தயக்கீரை புலாவ் செய்முறை விளக்கம்:
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் நெய் மற்றும் எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். எண்ணெய் லேசாக சூடாகியதும் ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, மராத்தி மொக்கு, அண்ணாச்சி பூ, சோம்பு ஆகியவற்றை போட்டு பொரிந்து வந்ததும், நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்க்க வேண்டும். லேசாக வெங்காயம் வதங்கியதும், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கும் போதே அதனுடன் பட்டாணியையும் சேர்த்து வதக்க வேண்டும். பச்சை பட்டாணியாக இருந்தால் புலாவ் செய்வதற்கு ஒரு மணிநேரம் முன்பு நன்கு கழுவி சுத்தம் செய்து சுடு தண்ணீரில் ஊற வைத்தால் போதுமானது. பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள வெந்தயக்கீரையை முழுதாக அப்படியே சேர்க்க வேண்டும். கீரை வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து, லேசாக உப்பு போட்டு வதக்க வேண்டும்.
இவைகள் அனைத்தும் நன்கு சுருள வதங்கி வந்ததும், பாஸ்மதி ரைஸ் சேர்த்து கிளறி விட வேண்டும். பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு பங்கு அரிசிக்கு, இரண்டு பங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆனால் இதில் தேங்காய் பால் சேர்த்து உள்ளதால், ஒன்னே முக்கால் பங்கு தண்ணீர் சேர்த்தால் போதும். உப்பு சரியாக இருக்கிறதா? என்று ஒரு முறை பார்த்து விட்டு குக்கரை மூடி வைத்து விட வேண்டும்.
அவ்வளவு தான்! இரண்டே விசில் விட்டால் போதும், அற்புதமான வாசனையில், ஆரோக்கியமான வெந்தயக் கீரை புலாவ் ரெடி ஆகி இருக்கும். இதற்கு காரசாரமான சைடிஷ் அல்லது துவையல் வைத்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.