அன்று உயிர் காத்த பனை மரம் ! இன்று தமிழர்கள் மறந்த பனை மரம்!

அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் ஒன்றுதான் பனை மரம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய மூத்த மொழி தமிழ்மொழி என நாம் பெருமை பட்டுக்கொள்வதற்கான முக்கிய சாட்சியாக விளங்குவது பனை ஓலைச் சுவடிகளிலிருந்து கிடைத்த வரலாற்றுத்தகவல்கள்தான். பனை மரம் தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது என்பதனை

தொல்காப்பியம், திருக்குறள், திருவாசகம், தேவாரம், திவ்யபிரபந்தங்கள் உற்பட பல சங்க இலக்கியங்களிலும் காணக்கிடைக்கிறது. பனை ஓலைகளில் எழுதப்பட்டதால்தான் இந்த இலக்கியங்களும், தமிழ் எழுத்துக்களும் அழியாமல் தப்பிப்பிழைத்தன எனக்கூறினாலும் தகும். ஓலைச்சுவடிகள் செய்ய பனை மர ஓலைகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், தமிழகத்தில், குறிப்பாக மூன்று வகை பனை மரங்களான, தாளைப்பனை, கூந்தல் பனை, இலாந்தர் பனை போன்ற மரங்களின் ஓலைகளையே ‘ஓலைச்சுவடிகள்’ செய்ய பயன்படுத்தியுள்ளனர் என வரலாறு கூறுகின்றது.

உலக நாகரீகங்களில், எழுதுவதற்காக ஆமை ஓடுகள் மற்றும் பல்வேறு விலங்குகளின் தோள்கள் பயன்படுத்தப்பட்டபோதிலும் தமிழர்கள்தான் இதனை எளிமைப்படுத்தி பனைஓலைகளில் எழுதத்தொடங்கினர். அச்சுக்கருவி கண்டுபிடிக்கப்படும்வரையில் இந்தமுறை தொடர்ந்ததென்றால் மிகையில்லை. திருக்குறளில் “பயன் மரம் ” என குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மரங்களில் பனை மரமும் ஓன்று.

“கிணற்றைச் சுற்றி பத்து பனைமரம் நின்றால் இறுதிவரை அந்த கிணறு வற்றவே வற்றாது . அப்படி வற்றவிடாத அந்த பனைமரம் கழுத்து முறிந்து சாகிறது என்றால் அந்த நிலம் பாலை வனமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள் ” என்பது நம்மாழ்வார் கூற்று . ஒரு சமூகத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களைவைத்து அச்சமூகத்தை கணிப்பது “புழங்குபொருள் பண்பாடு” எனப்படும். அந்தவகையில் தாலி முதல் பல்வேறு அன்றாட தேவைக்குரிய மற்றும் உணவு பொருட்கள்வரை பனையின் பயன்பாடு தொன்றுதொட்டு தமிழர்களோடு நெருங்கிய தொடர்புகொண்டது . (பனை ஓலையிலிருந்து செய்யப்பட்ட தாலி ” தாலிப்பனை” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது இலக்கியங்களில்) பனை மரத்தினை தலவிருட்சமாக கொண்ட பல கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் மட்டுமன்றி இலங்கையிலும் பனையின் பெயரை அடிப்படையாகக்கொண்டு பல ஊர்களின் பெயர்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒற்றை பனைமரம் எண்ணூருக்கும் மேற்பட்ட மருத்துவ பயன்களைக்கொண்டது என விளக்குகிறது யாழ்ப்பாணத்தை சேர்ந்த தங்கத்தாத்தா என அழைக்கப்படும் சோம சுந்தரப்புலவர் எழுதிய “தாலவிலாசம்” எனும் இலக்கியம்.

உண்மையில், ஆங்கிலேயரின் வருகையுடனேயே பனையின் அழிவும் ஆரம்பித்து விட்டன என்றுதான் கூறவேண்டும். சங்க காலம் தொட்டு தமிழர்களின் இனிப்பு சுவை என்கிறவொன்றிற்கு பயன்பட்டது “கருப்பங்கட்டி” எனப்படும் பனங்கருப்பட்டியே. வெள்ளை சர்க்கரை என்கிற உணவு ஆங்கிலேயரால் நம் சமூகத்தினுள் புகுத்தப்பட பனங்கருப்பட்டியின் பாவனை மெல்லமெல்ல அழித்தொழிக்கப்பட்டது. ஆனால், இன்றும் பல மேலைத்தேய நாடுகளில் பனங்கருப்பட்டி, பனங் கல்கண்டு போன்றவற்றையே தமது உணவுப்பட்டியலில் வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது . எப்படி மிளகாயை நம்மிடம் தள்ளிவிட்டுவிட்டு ஆரோக்கியம் நிறைந்த மிளகை அபகரித்துக்கொண்டார்களோ அப்படிதான் இதுவும் .

கிராமப்புர பொருளாதாரத்தினை மேம்படுத்த பனைமரங்களை மீட்டெடுக்கவேண்டிய அவசியம் தற்போது நம்மிடம் உள்ளது . முன்பெல்லாம், பாய், விசிறி , பெட்டிகள், தூரிகைகள், பல அலங்காரப்பொருட்கள் போன்றவை இந்த பனைமரத்திலிருந்து உருவாக்கப்பட்டது , இது கிராமப்புறத்தில் உள்ள பலருக்கும் ஓர் வாழ்வாதாரமாகவும் இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் நிலைமை தலைகீழ் . பனைக்கென்று எந்த ஆராச்சிநிலையமோ,

அல்லது ஊக்குவிப்புகளோ இல்லை என்பது வருந்தத்தக்கது. சுமார் நூறு அடிகளுக்கு மேல் வளர்ந்துள்ள பனையில் ஏறுவதென்பது அவ்வளவு எளிதானதல்ல. இந்த தொழில் நவீனமயப்படுத்தப்படாமல் இன்னும் பாரம்பரிய முறையில் நகர்ந்துகொண்டிருப்பதும் பனைப்பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகவும் அமைகிறது .

உலகில் நூற்றி எட்டு நாடுகளில் பனை மரங்களும் அது சார்ந்த தொழிலும் முன்னிலை வகித்தாலும் தமிழகத்திலும், இலங்கையிலும் பனைத்தொழில், குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு மாத்திரமே உரித்தானது, இழிவானது என்கிற ஓர் எண்ணமும் நம் சமூகத்தில் இருப்பதால், அந்த தொழிலை செய்யும் பலரும் தமக்குப்பின் இந்த தொழிலை தம்முடைய வாரிசுகள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர் . இதுவும் பனையின் வீழ்ச்சிக்கான காரணம் .

பனைமரம் என்பது நட்டதும் உடனடியாக பலன் தரக்கூடியதல்ல, அதற்கு குறைந்தது இருபது தொடக்கம் இருபத்தைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும், ஆகவே இன்றைய தலைமுறையில் நட்டதும் குறைந்தது ஆறுமாதங்களில் பலன் தந்துவிடவேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் பனையின் வளர்ச்சியில் மக்கள் ஈடுபாடுகாட்டாமைக்கு ஓர் காரணம் எனலாம்.
புகைப்படஉதவி

பூலோகத்தின் “கற்பகத்தரு” எனப்படும் பனைமரம் முழுமையாக வளர இருபது ஆண்டுகாலம் தேவைப்படும் , பதினைந்து ஆண்டுகளுக்குப்பின்னரே ஒரு பனை ஆண் பனையா? பெண் பனையா என்பதை தெரிந்துகொள்ள முடியும் . பெண் பனையினை “பருவப் பனை” என்றும் ஆண் பனையினை “அழுகுப் பனை” என்றும் குறிப்பிடுகின்றனர். சுமார் நூற்றி இருபது அடிவரை வளரக்கூடிய இம்மரங்களின் நுனி முதல் அடிவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலன்களைத் தரக்கூடியது.

“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரி வார்” என்பது திருக்குறள், ஆனால் நமக்கெல்லாம் நம் மொழியைக் கட்டிக்காத்து அருளிய பனை மரத்தினை காக்க மறந்து நன்றி மறந்த இனமாக மாறிவிட்டோமா தமிழர்களாகிய நாம்?

Exit mobile version