குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறாதவர்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் ஏகாதசி திதி வரும். இப்படி வருடத்திற்கு 24 ஏகாதசிகள். சில வருடங்களில் 25 ஏகாதசியும் வருவதுண்டு. இந்த ஏகாதசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது. அப்படி தை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ‘புத்ரதா’ ஏகாதசி என்று பெயர். புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டி இந்த ஏகாதசியை மேற்கொள்ளலாம். இந்த ஏகாதசியின் மகிமை பற்றி, யுதிஷ்டிரனுக்கு, கிருஷ்ண பகவானே எடுத்துரைத்திருப்பதாக ‘ஏகாதசி மகாத்மியம்’ கூறுகிறது.
துவாபர யுக காலத்தில், வாழ்ந்து வந்த மன்னன் மஹிஜித். அந்த மன்னன் மஹிஷமதிபூரி என்ற நாட்டை ஆட்சி செய்து வந்தான். செல்வ வளம் நிறைந்த அந்த நாட்டில் அனைத்து உயிர்களும், மன நிறைவுடன் வாழ்ந்து வந்தன. மனிதர்கள் எந்த குறையும் இன்றி தங்கள் வாழ்வை சிறப்பான முறையில் நடத்தி வந்தார்கள். ஆனால் மன்னனின் மனதில் மட்டும் பெரும் குறை ஒன்று இருந்தது. ஏனெனில் தனக்குப் பின் ஆட்சியை வழிநடத்திச் செல்ல அவனுக்கு ஒரு வாரிசு இல்லை.
தன் வாழ்வில் பல தான, தருமங்களை செய்தபோதிலும், தனக்கு எதற்காக இந்த நிலை வந்தது என்று, தன் நாட்டு அறிஞர்கள் பலரையும் அழைத்துக் கேட்டான், மன்னன். அவர்களால் அதற்கு பதில் கூற முடியவில்லை. ஆனால் ஒரு ஆலோசனையை மன்னனுக்கு வழங்கினர். அதாவது ‘நாட்டின் எல்லைக்குட்பட்ட வனத்தில் வசிக்கும் லோசமர் முனிவரை சந்தித்தால் இதற்கான விடை கிடைக்கும்’ என்றனர். மன்னனும், “உடனடியாக முனிவரை சந்தித்து என்ன செய்யலாம் என்று அறிந்து வாருங்கள்” என்று கூறி அமைச்சர்களை அனுப்பிவைத்தான்.
லோசமர் முனிவர் சாதாரணமானவர் அல்ல. அவர் பிரம்மதேவனுக்கு நிகரான ஞானமும், சக்தியும் படைத்தவர். அவரை சந்தித்த அமைச்சர்கள், தங்கள் மன்னனின் நிலையை எடுத்துக்கூறி, அதற்கு நல்ல தீர்வு இருந்தால் சொல்லும்படி வேண்டினர்.
லோசம முனிவர் அவர்களுக்கு பதிலளித்தார். “உங்கள் மன்னன் இந்த பிறப்பில் நல்வினைகளை பலவாறு சேர்த்திருந்தாலும், கடந்த பிறவியில் செய்த தீவினையால் இந்த சாபம் ஏற்பட்டுள்ளது. அந்த தீவினை நீங்கிவிட்டால், அவன் வேண்டும் புத்திர பாக்கியம் கிடைத்து விடும். அதற்கு உங்கள் மன்னன் சரணடைய வேண்டியது பகவான் கிருஷ்ணரைத்தான். தை மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி நாளில் நாராயணரை நினைத்து விரதம் இருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உணவருந்தாமல், மகாவிஷ்ணுவின் நாமங்களை மட்டும் உச்சரிக்க வேண்டும். இரவில் கண்விழித்து, கிருஷ்ண பரமாத்மாவின் பெருமைகளைப் பாடியும், வாசித்தும், ஹரி கதைகளைக் கேட்டும் பொழுதை கழிக்க வேண்டும். பின்னர் மறுநாள் துவாதசி அன்று விரதம் முடித்தால், முற்பிறவி தீவினைகள் அகன்று புத்திர பாக்கியம் கிடைக்கப்பெறும்” என்றார்.
லோசமர் கூறிய அறிவுரையின்படியே தை மாத வளர்பிறை ஏகாதசியில் விரதம் இருந்த மன்னன் மஹிஜித்துக்கு, விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைத்தது.
குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறாதவர்கள், இந்த ஏகாதசி விரதத்தை முறையாக கடைப்பிடித்து வந்தால், அதற்கான பலன் விரைவிலேயே கிடைக்கப்பெறும்.