மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றம் நிமிர்ந்த தலை அமைப்பும், இரு கால்களால் நடக்கும் பண்பும் ஆகும்.
இந்தப் பண்புகளால்தான் உடல் இயக்கத்தில் உடல் சமநிலைப்படுத்தப்பட வேண்டியதும், நரம்பு-தசை இயக்க ஒருங்கிணைப்பும் அவசியமாகிறது. மனிதன் நடக்கும்போது இரண்டு விஷயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலாவது நம் எடை முழுவதும் அடித்தளமாகிய பாதத்தில்தான் நிலைநிறுத்தப்படுகிறது. மேலும் நடக்கும்போது ஒரு கால் பாதம் மட்டும்தான் மாறி மாறி எடையைத் தாங்கி நிற்கிறது.
இரண்டாவதாக நடக்கும்போது கால்கள் மாறி மாறி மேலே தூக்கி தரையில் வைக்கும்போது நம் உடல் பக்கவாட்டில் அசைந்து உடலின் புவிஈர்ப்பு மையம் வலது, இடது கால் பாதங்களில் விழுகிறது.
மேலும் பாதத்தின் முன்பகுதி கட்டை, விரல், கால் விரல்கள் ஆகியவற்றின் தொடர் ஒருங்கிணைப்பால் முன்னோக்கிச் செல்லும் விசையை அதிகமாக்குகின்றன. மூளையின் முக்கிய உடல் சமநிலை உறுப்பான சிறுமூளை பிறந்த குழந்தைக்கு முழு வளர்ச்சி பெற்றிருப்பதில்லை.
அதுபோல பெருமூளையின் இயக்க உணர்வுத் திறனைக் கட்டுப்படுத்தும் மையமான நெற்றிக் கதுப்பும் முழு வளர்ச்சி பெற்று இருக்கவில்லை. மேலும் நரம்பு-தசை ஒருங்கிணைப்புக்குத் தேவையான அனிச்சைச் செயலின் வளர்ச்சி ஏற்படவில்லை. உடல் எடையைத் தாங்கும் அளவிற்கு எலும்பு தசைகள் திறன்மிக்கதாக இல்லை.
மேற்குறிப்பிட்ட ஒருங்கிணைப்புகள் படிப்படியாக உருவாகி ஒரு வருடம் அல்லது 14 – 16 மாதங்களுக்குள் குழந்தை எழுந்து நடக்கத் தொடங்கும். குழந்தை நடக்கும்போது கால் அடி எடுத்து வைப்பது குறுகியதாகவும், சமச்சீரற்றும் இருக்கும்.
மேலும் அதன் குதிகால் தரையில் படாது. பழகப் பழக உதவியில்லாமல் நடக்கும்போது முழு பாதமும் தரையில் படும். ஒரு சில நேரங்களில் காலை உயரமாகத் தூக்கும்போது (உடலில் புவிஈர்ப்பு மைய ஒருங்கிணைப்பு குறையும்போது) கீழே விழும். படிப்படியாக நரம்பு-தசை இயக்கத் தொடர் ஒருங்கிணைப்பு முழு வளர்ச்சி பெற்றவுடன் குழந்தை சீரான அடிகளுடன் நேராக நடக்க தொடங்குகிறது.
ஆடு, மாடு ஈன்ற கன்றுகள் பிறந்தவுடன் நடக்கின்றன. காரணம், அவற்றுக்கு உடல் எடையை சமநிலைப்படுத்தவோ, புவிஈர்ப்பு மையத்தை நிலைப்படுத்தவோ அவசியமில்லை. (நான்கு கால்களால் நடக்கும் பண்பு) அந்தக் கன்றுகளுக்கு நரம்பு-தசை இயக்க ஒருங்கிணைப்பு வளர்ச்சி பெறும் நிலையிலே இருக்கும்.
இந்த ஒருங்கிணைப்பு உடல் இயக்க வளர்ச்சி வீதம் மனிதனைவிட மாடுகளுக்கு அதிக விரைவில் நடைபெறுகின்றது.