Home கட்டுரை மருத்துவத்தின் இதய துடிப்பு தாதியர்கள்..!

மருத்துவத்தின் இதய துடிப்பு தாதியர்கள்..!

0

❤❤ஒரு குழந்தை பிறந்தவுடன் கருவில் சுமந்த தாயை பார்க்கும் முன் காணும் தாய் முகம் உங்களுடையதே❤❤

தாதியர் சேவையின் தாயான ஃப்ளோரன்ஸ் நைடிங்கேலின் பிறந்த தினம் சர்வதேச தாதியர் தினமாக ஒவ்வாரு வருடமும் மே 12 ம் திகதி நினைவுகூரப்படுகிறது .

தாதியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும், அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவு கூர இத் தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தாதியர்கள் அமைப்பு குறித்த தினத்தை 1965 ஆம் ஆண்டிலிருந்து நினைவு கூருகிறது. 1953 இல் ஐக்கிய அமெரிக்காவின் அரச சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் என்பவர் இத்தினத்தை தாதியர்கள் தினமாக அறிவிக்க வேண்டுமென விடுத்த அழைப்பை அன்றைய ஜனாதிபதி ஐசன்ஹோவர் நிராகரித்துள்ளார்.

இருப்பினும் 1965 ஆம் ஆண்டிலிருந்து நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல்லின் பிறந்த நாளான மே- 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் ஆண்டுதோறும் மே 12 ஆம் நாளில் லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சம்பிரதாயபூவமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள தாதியர்கள் மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகை தரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டுப் பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும்.

இது ஒரு தாதியரிலிருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. அதேநேரம் 1974 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் மே- 09 முதல் மே- 15 வரை செவிலியர் வாரம் கொண்டாடப்படுகிறது.

மறுபுறமாக ‘தாதியார் தினம்’ என்று வரும்போது நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதியான புளோரன்ஸ் நைட்டிங்கேலை மே 12, 1820 – ஆகஸ்ட் 13, 1910) நினைவுகூராமல் இருக்க முடியாது.

தாதித் தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம் பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார். ‘விளக்கேந்திய சீமாட்டி’, ‘கை விளக்கேந்திய காரிகை’ என்று அனைவராலும் போற்றப்பட்ட இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளி விபரவியலாளரும் ஆவார்.

பிரித்தானியாவில் செல்வச் செழிப்புமிக்க உயர்குடிக் குடும்பமொன்றைச் சேர்ந்த இவர் இத்தாலி, புளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத்தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். இவரின் தந்தை வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் (1789-1880), தாயார் பிரான்செஸ் நைட்டிங்கேல் (முன்னர் ஸ்மித்) (1794- 1875). புளோரன்சின் தாய்வழிப் பாட்டனான வில்லியம் சிமித் அடிமை முறை ஒழிப்புக்காக வாதாடியவராவார். ‘எம்ப்லீ பார்க்’ இது புளோரன்ஸ் நைட்டிங்கேலின் குடும்ப வசிப்பிடமாகும்.

சிறுவயதில் கணிதத்தில் திறமையுள்ளவராயிருந்த இவர் தனது தந்தையாரின் கற்பித்தலில் அப்பாடத்தில் வல்லவாரானார். குறிப்பாகத் புள்ளிவிபரவியலில் ஆர்வமுள்ளவராக இருந்த இவர், தனது ஆய்வறிக்கைகளில் புள்ளி விபரங்களை அதிகளவில் பயன்படுத்தினார். தரவுகளை வரைபடமாக்கி அளிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். பலவிதமான வரைபுகளை உருவாக்கி அவற்றின் மூலம் தரவுகளை வகைப்படுத்தி அறிக்கைகளில் பயன்படுத்தினார்.

ஒரு கிறிஸ்தவரான இவர் தனக்கு ‘இறைவனால் விதிக்கப்பட்ட பணியாகவே’ தாதியர் சேவையை உணர்ந்து மேற்கொண்டார். 1837 ஆம் ஆண்டில் அவருக்கு ஏற்பட்ட இந்த உணர்வு அவரது வாழ்நாள் முழுதும் நீடித்தது. பெற்றோரின் எதிர்ப்புக்கும் மத்தியில் தாதியர் சேவையில் ஈடுபடவேண்டும் எனும் தனது முடிவை புளோரன்ஸ் 1845 ஆம் ஆண்டு அறிவித்தார்.

இதையடுத்து தன் வாழ்நாளையே தாதிச் சேவையில் இவர் இணைத்துக் கொண்டமை இவரது உள விருப்பையும், அவரது காலத்தில் பெண்ணுக்குரிய எதிர்பார்ப்புகளை முறியடிப்பதற்கான அடையாளப்படுத்தலாகவும் கொள்ளப்படுகின்றது.

அக்காலத்தில் தாதியர் சேவை ஒரு மதிப்புள்ள பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அக்காலத்தில் தாதியர் சமையல் வேலையாட்களாகவும் உயர் குடும்பங்களில் வேலை செய்ய வேண்டியிருந்தது.

புளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844 ஆம் ஆண்டு டிசம்பரில், இலண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியொன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து புளோரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார்.

அக்காலத்தில் வறியோர் சட்டம் தொடர்பான சபையின் தலைவராக இருந்த சார்லஸ் வில்லியர்ஸ் என்பவரின் ஒத்துழைப்பையும் அவர் பெற்றுக்கொண்டார். இது வறியோர் சட்டத்தில் சீர்திருத்தம் கோருவதில் அவரை ஈடுபடுத்தியதுடன் மருத்துவ வசதிகளின் வழங்கலுக்கும் அப்பால் அவரது ஈடுபாட்டை விரிவாக்கியது.

1846 ஆம் ஆண்டில் இவர் ஜேர்மனி சென்றார். அங்கு கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் கவனிப்புகளும், மருத்துவச் சேவைகளும் இவரை மிகவும் கவர்ந்தன. 1851 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 4 மாதங்களாக ஜெர்மனியில் கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் இவர் தீவிரப் பயிற்சியைப் பெற்றார். தாதியர் சேவையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதிலிருந்து திருமணம் தடை செய்யும் எனக் கருதி ரிச்சர்ட் மொங்க்டன் மில்ன்ஸ் எனும் அரசியல்வாதியுடனான தனது உறவை முறித்துக் கொண்டார்.

பின்னாளில்- சிறந்த அரசியல் வாதியும், போர்ச் செயலராகப் பணியாற்றியவருமான சிட்னி ஹேர்பேர்ட் என்பவரை ரோமில் சந்தித்து அவர்பால் ஈர்க்கப்பட்டார். சிட்னி ஹேர்பேர்ட் ஏற்கெனவே மணமானவர். எனினும் இருவரும் வாழ்நாள் முழுதும் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர். கிரீமியாவில் நைட்டிங்கேல் ஆற்றிய பணிகளுக்கும், பொதுவாக அவரது துறையில் ஆற்றிய பணிகளுக்கும், ஹேர்பேட் வசதிகள் செய்து கொடுத்ததுடன் ஊக்கமும் கொடுத்து வந்தார். புளோரன்சும் ஹேர்பேட்டின் அரசியல் பணிகளுக்கு ஆலோசனை வழங்கி வந்தார் எனக் கூறப்படுகின்றது.

ரஷ்யப் பேரரசிற்கும், பிரான்ஸ்- ஐக்கிய இராச்சிய மற்றும் ஒட்டோமான் பேரசுப்படைக் கூட்டணிக்குமிடையே 1854 – 1856 ஆம் ஆண்டு நடந்த கிரிமியன் போரில் தனது மருத்துவப் பங்களிப்பின் மூலம் புளோரன்ஸ் நைட்டிங்கேல் புகழ் பெற்றவரானார். இந்த யுத்தத்தின்போது வெளிச்சுகாதார விடயங்களில் இவர் கூடிய கரிசனை காட்டினார். மேலும், மருந்துத் தட்டுப்பாடும், குறையூட்டமும் அதிக பணியுமே நோயாளிகளான வீரர்களின் இறப்புக்குக் காரணமென புளோரன்ஸ் நைட்டிங்கேல் கருதினார்.

இந்தப் போர் அனுபவம் அவரது பிற்கால வாழ்வில் சுகாதாரமான சூழலைப் பேணலின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைப்பதில் பெரும்பங்கை வகித்தது. பிரித்தானியாவிலிருந்த இராணுவ மற்றும் பொது மருத்துவமனைகளில் கவனிப்பையும், சூழலையும் மேம்படுத்த வேண்டுமென்று நைட்டிங்கேல் வாதாடி வந்தார்.

மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த “மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள்” , அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச் சிறந்த பாடநூலாகக் கருதப்பட்ட “தாதியர் பணி பற்றிய குறிப்புக்கள்” “உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள்” ”பிரித்தானிய இராணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும், செயல் திறனும்” என்பவை நைட்டிங்கேல் எழுதிய புகழ் பெற்ற நூல்களுள் சில.

ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் “தாதியர்கள் ” என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம். “தாதியர்கள் ” உலக அரங்கில் அங்கீகரிக்கப்படுகிறார்கள்.

இன்றைய மனித சமூகத்துக்கான தாதிமாரின் சேவையை இலகுவாக மதிப்பிட்டு விட முடியாது. சாதாரண வைத்திய சேவைகளிலிருந்து யுத்த கால, கொரோனா நோய்க்கான வைத்திய சேவைகள் வரை ஒவ்வொரு கட்டத்திலும் இவர்களது சேவைகள் வியாபித்துக் காணப்படுகின்றது.

பக்குவமாகவும் அதேநேரம், பொறுப்புள்ள முறையிலும் மனித அசிங்கங்களைக் கூட கவனத்திற் கொள்ளாமல் உணர்வோடு உரசி இவர்கள் ஆற்றும் சேவை மெச்சத்தக்கதே. இந்த அடிப்படையில் இவர்களின் சேவைகளை மனித சமூகம் நினைவுகூர வேண்டியது சமூகத்தின் கட்டாயக் கடமையாகவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version