Home இலங்கை போராட்டக்காரர்களை கலைக்க தயாராகின்றதா இராணுவம்-வெளிவந்த உண்மை

போராட்டக்காரர்களை கலைக்க தயாராகின்றதா இராணுவம்-வெளிவந்த உண்மை

0

இலங்கை ‘ஆட்சியைவிட்டு ராஜபக்சக்கள் வெளியேறவேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கு சிறிலங்காவின் இராணுவம் தயாராகிவருவதாக இலங்கையில் உள்ள பல தரப்புக்கள் அச்சம் வெளியட்டு வருகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்களை கைதுசெய்து தடுத்துவைப்பதற்காக பல பாடசாலைகள் தயார் படுத்தப்பட்டுவருவதாகவும் சில உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்பாட்டத்தைக் கலைப்பதற்கான பயிற்சிகளை இராணுவத்தினர் பெற்றுவருவதாக வெளிவந்த செய்திகள், நாடாளுமன்றுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஆயுதங்கள் சகிதமாக முகத்தை மறைத்தபடி இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் நுழைந்த சம்பவம், போராட்டக்கார்களுக்கு எதிராக இராணுவத்தினர் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்ற முன்நாள் இராணுவத் தளபதி பீலட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் எச்சரிக்கை – இதுபோன்ற பல சம்பவங்கள், இராணுவத்தை உபயோகித்து போராட்டக்காரர்களுக்கு எதிரான ஒரு பலப்பிரயோகத்தை மேற்கொள்ள ஆளும்தரப்பு தயாராகி வருவதான சந்தேகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

மக்களின் கோரிக்கையை ஏற்று ஆட்சிக்கட்டிலில் இருந்து இறங்கத் தயக்கம் காண்பித்துவரும் ராஜபக்சக்கள் தங்களிடம் உள்ள அத்தனை வழிமுறைகளையும் பாவித்து அதிகாரங்களை தக்கவைக்கும் எத்தனைங்களைச் செய்து வருகின்றார்கள்.

தொடர்ந்தும் செய்வார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை.

அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தது, போராட்டக்காரர்களைக் கைதுசெய்து சிறைகளில் அடைத்தது, ஆர்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தியது, எதிர்க்கட்சிகளை வளைக்கப்பார்த்தது, ஆர்ப்பாட்டக்காரர்களை சமூகவிரோதிகள் என்று சித்தரித்தது – இப்படி பல எத்தனங்களைச் செய்து, மக்களின் ஜனநாயகப் போராட்டங்களுக்கு சற்றுமே செவிமடுக்காத தங்களுடைய நிலைப்பாட்டை செயல்களினூடாக வெளிப்படுத்தி வருகின்றார்கள் ஆளும் ராஜக்பசேக்கள்.

இன்றைய நிலையில் ராஜபக்சக்களின் பிரம்மாஸ்திரமாக அவர்களது கரங்களில் 3 இலட்சத்து 47 ஆயிரம் படைவீரர்கள் இருக்கின்றார்கள்.

கட்டுப்பாடான அந்தப் படைவீரர்களை முழுவதுமாகக் கட்டுப்படுத்தக்கூடிய, ராஜபக்சக்களுக்கு மிக மிக விசுவாசமான தளபதிகள் இருக்கின்றார்கள்.

மிகச் சக்திவாய்ந்த சிறிலங்கா இராணுவ புலனாய்வுக் கட்டமைப்புக்கள் அவர்களது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

ராஜபக்சக்கள் பதவிவிலகுவது என்கின்ற முடிவுக்குச் செல்வதற்கு முன்பாக தமது கரங்களில் இருக்கின்ற ‘இராணுவம்’ என்ற பிரம்மாஸ்திரத்தையும் ஒரு தடவை பயன்படுத்திப்பார்க்க தயங்கமாட்டார்கள் என்று கூறுகின்றார் இலங்கையில் உள்ள ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளர்.

புதுவருடம், ஈஸ்டர் தினம் போன்ற முக்கிய தினங்கள் முடிவுற்ற நிலையில் எதிர்வருகின்ற வாரம் அளவில் இராணுவம் களத்தில் இறக்கப்படலாம் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

ஐ.எம்.எப். சாதகமான பதிலை வழங்காவிட்டால், போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதற்கு இராணுவம் இறக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version