மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்றிருந்தார்.
அங்கு ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை சாலையில் எரிந்தும், வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளுநர் வாகனம் மீது கல் வீசி நடத்திய தாக்குதலுக்கு எதிராக பல்வேறு கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மயிலாடுதுறையில் ஆளுநருக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது . ஆளுநர் மீது தூசு கூட விழாதவாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து போலீசார் கட்டுப்படுத்தினர்.
ஆளுநருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.