நடிகர் சூர்யா வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்காகவும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சென்னை மாநகர காவல் துறையின் சார்பில் இயங்கும் ‘காவல் கரங்கள்’ என்ற துறைக்கு நடிகர் சூர்யா, நவீன ரக கார் ஒன்றை நன்கொடையாக வழங்கினார்.
சென்னை மாநகர காவல்துறை, ‘காவல் கரங்கள்’ என்ற இயக்கத்தை தொடங்கி இருக்கிறது. இந்த இயக்கத்தின் சார்பில் பல தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, சாலையோரத்தில் வசிக்கும் ஏழைகள், ஆதரவற்றவர்கள், மனவளம் குன்றியவர்கள், உடல்நலம் சரி இல்லாதவர்கள் போன்றவர்களை கண்டறிந்து அவர்களை காப்பாற்றும் பணியில் செயல்பட்டு வருகின்றன. மேலும் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், சாலையோரத்தில் இறந்து கிடக்கும் சடலங்களை கண்டெடுத்து, அதற்கு இறுதிச் சடங்கு செய்து, அடக்கம் செய்தல் போன்ற பணிகளிலும் சேவை மனப்பான்மையுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களின் தேவைக்காக சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள். இந்த வாகனம் இவர்களுக்கான உணவு வழங்குவதற்கு பயன்படும். இந்த வாகனத்தை இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், டாக்டர் சரண்யா ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, கொடியசைத்து பயணத்தைத் தொடங்கி வைத்தனர்.