கணினியின் வளர்ச்சியும் தோற்றமும்..!

கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் இன்றைய அறிவியல் தகவல் வளர்ச்சி உலகத்தை ஒரு சிற்றூராக மாற்றிவிட்டது. தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம் நம்வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தகவல் தொடர்புச் சாதனங்களால் ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூட உடனுக்குடன் மற்றோரிடத்தில் அறிய முடிகிறது. இவற்றில் கணினியின் பங்கு அளப்பரியது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுப்பிடிப்பான கணினி, சில நொடிகளில் மில்லியன் கணக்குகளைச் செய்துகாட்டும். இதை முறையாக இயக்கினால் மனித மூளையைப்போன்று நுண்ணறிவுத் திறனோடு வேலைச்செய்யும். கணினி இன்று எல்லாத் துறைகளிலும் பயன்படுகிறது.

கணினி (computer) என்பது கட்டளைத் தொகுதிகள் (instruction sets) அல்லது நிரல்களின் (programs) மூலம் சில பணிகளை அல்லது கணக்குகளைச் செய்யும் இயந்திரம். முதன்முதலில் 1940களில் அறிமுகப்படுத்தப்பட்ட முழுமையான எலக்ட்ரானிக் கணினிகளில் பிரம்மாண்டமாக இருந்தன. அவற்றில் பலர் இணைந்து பணிபுரிய வேண்டியிருந்தது. அந்தத் தொடக்க காலத்துக் கணினிகளுடன் ஒப்பிடும்போது இன்றைய கணினிகள் பிரமிப்பூட்டுகின்றன. அவை பழைய கணினிகளை விட பல்லாயிரம் மடங்கு வேகமாக இயங்குவது மட்டுமல்ல, அவற்றை உங்கள் மேஜை மேல், மடி மேல், அல்லது சட்டைப் பைக்குள் கூட வைக்கலாம்.

பொதுவாக கணினி இயந்திரம் – வன்பொருள் (hardware) மற்றும் மென்பொருள் (software) இடையிலான பரிமாற்றத்தின் மூலம் இயங்குகிறது. வன்பொருள் (hardware) என்பது கணினியில் நீங்கள் பார்க்கவும் தொடவும் முடியும் பாகங்களைக் குறிக்கிறது; இதில் கணினிப் பெட்டியும் அதில் உள்ள அனைத்தும் அடங்கும். வன்பொருட்களில் மிக முக்கியமானது உங்கள் கணினியில் உள்ள மையச் செயலகம் (CPU) அல்லது நுண்செயலி (microprocessor) என்று அழைக்கப்படும் மிகச் சிறிய ஒரு செவ்வக வடிவச் சில்லு (tiny rectangular chip). உங்கள் கணினியின் மூளை (brain) போல — கட்டளைகளைப் புரிந்துகொண்டு கணக்கிடுவது இந்தப் பகுதிதான்.
கணினி வன்பொருள் சாதனங்கள்

கணினி வன்பொருள் சாதனங்கள் எனப்படுவது, உங்கள் திரையகம் (monitor), விசைப்பலகை (keyboard), சுட்டி (mouse), அச்சுப்பொறி (printer), மற்றும் பிற வன்பொருள் (hardware) உபகரணங்கள். இந்த வன்பொருள் சாதனங்கள் ஆனது கணினியில் நிறுவியுள்ள கணினி இயக்கமுறைமையை (computer operating system) தொடர்புக்கொண்டு கட்டளைத் தரவுகளைப் பறிமாறிக்கொள்கின்றன. எனவே இயக்கமுறைமை (operating system) இல்லாமல் வன்பொருள் சாதனங்கள் கணினி அமைப்பில் செயல்படுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகும்.

கணினி மென்பொருள் கோப்புகள்

மென்பொருள் (software) என்பது, வன்பொருளுக்கு (hardware) வேலை கொடுக்கும் கட்டளைகளை (instruction sets), அல்லது நிரல்களை (programs), குறிக்கிறது. உங்கள் கணினியில் கடிதங்கள் எழுதப் பயன்படுத்தும் சொற்செயலி (word processing program) ஒரு வகை மென்பொருள்தான். இயக்க முறைமை (Operating system) என்பது உங்கள் கணினியையும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சாதனங்களையும் நிர்வகிக்கும் மென்பொருள். Windows -உம் Mac OS -உம் பரவலாக அறியப்பட்ட இரண்டு இயக்க முறைமைகள் (operating systems).

கணினியின் வரலாறு

1946இல் அறிமுகப்படுத்தப்பட்ட ENIAC (Electronic Numerical Integrator and Computer) என்ற கணினிதான் உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி (first general-purpose electronic computer). அது அமெரிக்க ராணுவம் பீரங்கி குண்டுகள் செல்லும் பாதையைக் கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்டது. ENIAC பிரம்மாண்டமான ஒரு கணினி. அதன் எடை 27,000 கிலோகிராமுக்கு (60,000 பவுண்டுகளுக்கு) மேல் இருந்தது; அது ஒரு பெரிய அறையையே நிரப்பக்கூடியதாக இருந்தது. தரவைச் செயலாக்க (To process data), ENIAC சுமார் 18,000 வெற்றிடக் குழாய்களைப் (vacuum tubes) பயன்படுத்தியது. இதில் ஒவ்வொரு குழாயும் ஒரு சிறிய பல்பின் அளவு இருக்கும். அந்தக் குழாய்கள் எளிதில் தீர்ந்துபோனதால் (burned out) தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்க வேண்டியிருந்தது.
கணினியின் தோற்றமும் வளர்ச்சியும்

கணக்கிடுவதற்காக முதலில் எளிதான மணிச்சட்டம் உருவாக்கப்பட்டது. கணினி உருவாக இதுவே முதல் படிவமாக அமைந்தது. பாரிசு நகரை சார்ந்த பிளேஸ் பாஸ்கல் என்னும் அறிஞர் கணக்கிடும் கருவியைக் கண்டறிந்தார். கி.பி. 1833 இல் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ் பாப்பேஜ் கணினியை முதலில் வடிவமைத்தார். ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்லேஸ் என்பவர், கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால், முதல் செயல் திட்ட வரைவாளர் எனப் போற்றப்பட்டார். மின்னியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, ஹார்வார்டு பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் ஹோவார்டு ஜாக்கன் என்பவரை ஐ.பி.எம். பொறியாளர் துணையுடன் எண்ணிலக்கக் கணினியைக் கண்டறியத் தூண்டியது. இதற்கு ஹார்வார்டு மார்க்-1 எனப் பெயரிட்டனர். தற்போது அமெரிக்காவும் ஜப்பானும் மீத்திறன் கணினியை உருவாக்கப் போட்டியிடுகின்றன
கணினியின் வகைகள்

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாகக் கணினியிலும் புதுமையான அமைப்புகள் தோன்றிய வண்ணம் உள்ளன. இன்றைய நிலையில், பல்லூடக வசதிகொண்ட கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி முதலிய கணினிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. கணினியைப் பயன்படுத்துவோரின் தேவை அதிகரிக்க அதிகரிக்க கணினியின் வளர்ச்சியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இதனுடன் இணையத்தளமும் இணைக்கப்பட்டுள்ளதால் தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் பெறமுடிகிறது.
இணையம்

இணையம் என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர் ஜான் பாஸ்டல் என்னும் அமெரிக்கராவர். உலகெங்கும் உள்ள கணினிச் செய்திகளை இணைக்க, இணையம் பயன்படுகின்றது. இலக்கியம், அறிவியல், வானியல், வரலாறு, புவியியல், கணிதம், திரைப்படம் என எண்ணற்ற துறைகள் பற்றி இணையத்தின் வாயிலாகச் செய்திகளை அறிய முடிகிறது.

கணினியுடன் இணையத்தள இணைப்பானது படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. 1960 ஆம் ஆண்டில், ஒரு கணினியிலிருந்து மற்றொரு கண்னிக்குச் செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினர். இது மிகுந்த காலச் செலவை ஏற்படுத்தியது. இதற்காக மாற்றாக, ஒரு கட்டத்திற்குள் இருக்கும் கணினிகளை எல்லாம் கம்பிச்சுருளுடன் இணைக்க ஈதர்நெட் அட்டை என்னும் சிறுபலகையைப் பொருத்தி பயன்படுத்தினர். இந்த இணைப்பு குறும்பரப்பு வலைப்பின்னல் எனப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு வட்டாரத்துக்குள் உள்ள கணினிகளை இணைத்தனர். இஃது அகன்ற பரப்பு வலைப்பின்னல் கொண்டது. இந்த வலைப்பின்னல் வழியாக உலகம் முழுவதும் உள்ள கணினிகளை ஓரளவுதான் இணைக்க முடிந்தது. முழுமையான இணைப்பைப்பெறச் செயற்கைக்கோள்வழி இணைப்பினைப் பயன்படுத்திப் புவியைச் சுற்றி, நாடுகளின்மீது வலம்வரும் விண்வெளிக்கலண்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த உலகம் முழுமைக்கான வலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது.

சுவிச்சர்லாந்து நாட்டைச் சார்ந்த பிம்பெர்னர் லீ என்னும் இயற்பியல் வல்லுநர், 1989 ஆம் ஆண்டு இணையதளத்திற்கு உலகளாவிய வலைப்பின்னல் எனப்பெயரிட்டார். இதனை வையக விரிவு வலை எனவும் அழைக்கலாம். இவ்வலையமைப்பு, பலசெய்திகளை அழியாமல் பாதுகாக்க உதவுகிறது.

இணையத்திற்குத் தேவையானவை

பேரூர் முதல் சிற்றூர் வரை இணையத்தள வசதிகள் கிடைக்கின்றன. இணையத்தளச் சேவையைப் பயன்படுத்தத் தேவையான பொருள்களாவன.

  1. கணினி
  2. தொலைபேசி
  3. இணையச் சேவை வழங்குநர்
  4. மாற்றி (network interface card)
  5. தொடர்பு மென்பொருள்

இவற்றைக்கொண்டு இணையத் தொடர்பைப் பெறலாம். இணையத்தைப் பயன்படுத்த, இணையச் சேவைக்கு உரியவரிடம் தனிக்கணக்குத் தொடங்குதல் வேண்டும். பின்பு, கணினியை இணையத்தளத் தடத்தில் இணைத்தல் வேண்டும்.

இணைய இணைப்பு வகைகள்

தொலைபேசி வழியாகக் கணினியையும் மாற்றியையும் இணைத்துப் பயன்படுத்தும் முறை, தொலைபேசி இணைப்புச் சேவையாகும். இம்முறையில் விரைவும் வசதியும் குறைவாக இருந்தமையால், புதிய அணுகுமுறை தேவைப்பட்டது. வையக விரிவு வலை செயல்படுவதைக் கொண்டு, இணைய இணைப்பு நான்கு வகையில் கிடைக்கின்றது. உறுப்பினர் எண்ணிலக்க இணைப்பு, கம்பி வடமாற்றி, செயற்கைக்கோள் சேவை, கண்ணறைச் சேவை என்பன ஆகும்
கணினிவழிக் கல்வி

கணினியைப் பயன்படுத்திக் கற்கும் கல்வியே கணினிவழிக் கல்வி. வீட்டில் இருந்தபடியே தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வானியல், வரலாறு, புவியியல், பொது அறிவு, நடனம், கைவேலைப்பாடு என எந்த ஒன்றையும் கற்றுக்கொள்ள இயலும். தொலைதூரக் கல்வியை இணையத்தின் உதவியால் கணினிவழியாகப் பலரும் கற்று வருகின்றனர்.

இணையத்தின் வாயிலாக ஒருவருக்கு ஏற்படும் ஐயங்கள், சிக்கல்கள், தேவைகள், வழிகாட்டுதல்கள் முதலியவற்றுக்கான தீர்வுகளைப் பெறவியலும். தீர்வுகளைப்பெற மின்னஞ்சல் முகவரி உதவுகிறது. வீட்டிலிருந்தபடியே நேருக்குநேர் தொடர்புகொண்டு கற்கும் வாய்ப்பும் இன்று கிடைக்கின்றது.

கணினிவழியாக மொழிக்கல்வியும் பெறவியலும். மொழியின் அடிப்படைத் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் எனத் தொடங்கி உயர்நிலைத் திறன்களான கதை, கட்டுரை, செய்யுள், பாடல், கடிதம். சுருக்கி வரைதல், விரித்தெழுதுதல், குறிப்பெடுத்தல், அகராதி தேடல் என அனைத்தையும் இணையம் வாயிலாகக் கற்க இயலும்.

உலகெங்கும் வாழும் தமிழர்க்கும் தமிழறிய விழைவோர்க்கும் இவ்வாய்ப்பினைத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. தமிழ் என்னும் இணையத்தளம் தமிழ் எழுத்துகளை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத் தருகிறது.
கணினியின் பயன்கள்

கணினி, நம் அன்றாட வாழ்வில் பயன்படும் இன்றியமையாத கருவியாகிவிட்டது. வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, கல்வி, மருத்துவம், விண்வெளி, பாதுகாப்பு முதலிய பல்துறைகளில் பயன்பட்டு வருகிறது. சொல் விளையாட்டு, பொறியியல் வரைபடம் வரைதல், பொழுதுபோக்கு விளையாட்டுகள், கணிதத் தேற்றங்களின் தீர்வுகள் போன்ற அரிய பணிகளையும் கணினி எளிமையாகச் செய்கிறது.

பேருந்து நிலையங்கள், வங்கிகள், கல்வி நிலையங்கள், உணவகங்கள் என எவ்விடத்தும் கணினியின் ஆட்சியே நிலவுகிறது. அது வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தி, மக்களின் வாழ்க்கைத்தரம் உயரத் துணை செய்கிறது.

உள்ளங்கையில் உலகம். தொலைத்தொடர்புத் துறையில் ஈராயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை விடக் கடந்த இருபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பல நூறு மடங்காகும். இன்று ஒருவரை நேரடியாகப் பார்க்காமலே மின்னனுத்தகவல் வாயிலாகத் தொடர்பு கொள்ள முடிகிறது. வீட்டிலிருந்தபடியே உலகத்தைப் பார்க்க, பழக, மகிழ வாய்ப்பைப் பெறவும் இணையம் உதவுகிறது. கடந்த இருபதாண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்லவேண்டும். எனினும் கணினி வல்லுநர் பில்கேட்ஸின் கூற்று, இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது.

கணினியின் பயன்பாடுமிக்குள்ள இந்தக் காலத்தில், தொழில்நுட்ப உத்திகள் அனைத்தையும் பயன்படுத்திக் கணினிவழியாகத் தேவைப்படும் அனைத்துத் தகவல்களையும் பெறமுடிகிறது. இந்நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான கணினி, அறிவை விரிவு செய்வதற்கும் உலகத் தொடர்பிற்கும் சிறந்த வாயிலாகத் திகழ்கிறது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் புதுமைகளான கணினியும் இணையத்தளமும் தொலைத்தொடர்புக் கருவிகளும் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொண்டு வந்துள்ளன.

Exit mobile version