ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்றிரவு சர்வமத தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
இதன்போது அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்மீது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்ட கொலைவெறி தாக்குதலை, வன்மையாகக் கண்டித்துள்ள சர்வமத தலைவர்கள், வன்முறையை தூண்டியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அத்துடன், நாட்டில் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என்பதையும் சர்வமத தலைவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“ நாட்டில் தற்போது அரசாங்கமொன்று இல்லை. எனவே, நாடாளுமன்றத்தை உடன்கூட்டி, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமரை தெரிவுசெய்யவும். 20 நீக்கப்பட வேண்டும்.
15 பேருடன்தான் அமைச்சரவை அமையவேண்டும்.” எனவும் அவர்கள் எடுத்துரைத்துள்ளனர். இதன்போது, சர்வக்கட்சி தலைவர்களை இன்று சந்திக்கவுள்ளதாகவும், இச்சந்திப்பின்போது புதிய அரசொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார் எனவும் கலந்துரையாடலில் பங்கேற்ற சர்வ மத தலைவர்கள் தெரிவித்தனர்.
‘மைனாகோகம’, ‘கோட்டாகோகம’ அறவழி போராட்டக்காரர்கள்மீது ஆளுங்கட்சியின் நேற்று முற்பகல் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் வெடித்த நிலையில் இலங்கை எரிமலபோல் குமுறுகின்றது.
நாடாளாவிய ரீதியில் நேற்று மதியம் முதல் பதிவான அமைதியின்மை – மோதல் சம்பவங்களின்போது, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் போராட்டக்காரர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து பொங்கியெழுந்த , ஆளுங்கட்சி மற்றும் சில எதிரணி அரசியல் பிரமுகர்களின் வீடுகள் அடித்து – நொறுக்கப்பட்டு எரியூட்டப்பட்டன.
மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக இல்லமும் கொளுத்தப்பட்டது. அதோடு ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ரமேஷ் பத்திரண, விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, மொறட்டுவ மேயர், சனந் நிஷாந்த, கெஹலிய ரம்புக்வெல்ல, பிரசன்ன ரணவீர, துமிந்த திஸாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன, திஸ்ஸ குட்டியாராச்சி உட்பட 25 இற்கும் மேற்பட்ட அரசியல் பிரமுகர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு சொந்தமான சில ஹோட்டல்களும் நொறுக்கப்பட்டு வாகனங்களும் எரியூட்டப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. அநுராதபுரத்தில் உள்ள மந்திரவாதியான ஞான அக்கா என்றழைக்கப்படும் ஞானவதியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான ஹோட்டலும் கொளுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமமீதும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.