பிரதமர் ரணில் விக்கிரமசிங்க : ஓரிரு வாரங்கள் கடும் நெருக்கடி காலமாக அமையும்..!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஓரிரு வாரங்கள் எமக்கு மிகவும் நெருக்கடிமிக்க காலமாக அமையும் என நாட்டு மக்களுக்கு விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்ததாவது,

எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் சுபீட்சமானதொரு எதிர்காலத்திற்குச் செல்ல முடியும்.

நட்பு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளுடன் இரு தினங்கள் தீர்க்கமான கலந்துரையாடல்களை முன்னெடுத்தேன்.

அதன் மூலம் கிடைக்கப் பெற்றுள்ள பிரதிபலன்கள் சிறந்தவையாகவுள்ளன. நாட்டில் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் மேலும் ஆழமாக குறித்த நாடுகளுக்கு தெளிவுபடுத்தி அவற்றுடனான ஒப்பந்தங்களுக்குச் செல்ல வேண்டும்.

இந்தியா போன்ற நாடுகளுடன் அவ்வாறான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறிருப்பினும் இந்த வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதற்கு இன்னும் 2 அல்லது 3 மாதங்களேனும் செல்லும். அதன் பின்னர் குறுங்கால மற்றும் நீண்ட கால எதிர்காலத்தை சுபீட்சமான நிலைமைக்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படும் அடுத்து வரும் சில வாரங்களிலேயே கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.

நாட்டின் பொருளாதாரம் , எரிபொருள் மற்றும் உரம் குறித்து இரு தினங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. குறித்த மதிப்பீடுகளில் நாம் இதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளவில்லை என்பதால் , தட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.

எனவே அடுத்த ஓரிரு வாரங்களே எமக்கு மிகவும் நெருக்கடிமிக்க காலமாக அமையும்.

அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பதன் மூலம் இந்த பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள முடியும் என்று நான் நம்புகின்றேன், எனக் குறிப்பிட்டார்.

Exit mobile version