அரச ஊழியர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்

இலங்கையில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அரசாங்க செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரச ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதனை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவன் சந்திர இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அலுவலகப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் வரவழைத்து நிறுவன தலைவர்களின் விருப்பத்திற்கேற்ப செயற்பட அனுமதிக்குமாறு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொலைதூரத்தில் இருந்து பணிக்கு வரும் உத்தியோகத்தர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பணியிடத்திற்கு தற்காலிகமாக இணைத்துக் கொள்ள தேவையான அதிகாரங்களை வழங்குமாறும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரம், எரிபொருள், தண்ணீர் போன்றவற்றைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

Exit mobile version