அவுஸ்திரேலியாவின் கடல் எல்லைப் பகுதியில் தேர்தல் தினமான கடந்த சனிக்கிழமை பிரவேசித்த சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பி அனுப்பட்டுள்ளனர்.
இதேவேளை இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு அண்மித்த கடல் பரப்பில் பிரவேசித்தமை தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் விசாரணை நடத்தவுள்ளதாக கூறியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் வாக்களிப்புக்கு மத்தியில் படகு எவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு மிக அருகில் வந்தது என்பது குறித்தும் கப்பல் பிரவேசித்தமை தொடர்பான தகவல் வெளியிடப்பட்ட நேரம் குறித்தும் மீளாய்வுகள் இடம்பெறும் என அவுஸ்திரேலியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர்களை மேற்கோள்காட்டி சிட்னி மோர்னிங் ஹெறால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
கிறிஸ்மஸ் தீவின் மேற்கு கரையோரத்தில் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்ட படகில் இலங்கையைச் சேர்ந்த 15 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்களிப்பு நிறைவுபெறுவதற்கு முன்னர் இலங்கையில் இருந்து சென்ற சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதை அப்போது பிரதமராக இருந்த ஸ்கொட் மொரிசன் உறுதி செய்திருந்தார்.
அரசாங்க கொள்கையின் கீழும் சாதாரண நெறிமுறைகளை பின்பற்றியும் குறித்த கப்பல் இடைமறிக்கப்பட்டதாகவும் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, இலங்கையர்களை ஏற்றிய கப்பலானது மீண்டும் இலங்கைக்கு திரும்பி அனுப்பட்டுள்ளதாக பதில் பிரதமர் Richard Marles தெரிவித்துள்ளார்.
அவர்களை சொந்த நாட்டிற்கு திரும்பி அனுப்பும் போது சில நடைமுறைகள் இருக்கும் எனவும், அந்த விடயங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.