இலங்கை கட்டுமானத்துறையில் 70%த்துக்கு மேற்பட்
டோர் வேலை இழக்கும் அபாயம்!

பொருளாதார நிலைமைக்கு மத்தியில், நாட்டின் கட்டுமானத்துறையில், 70 முதல் 80 சதவீதமானோர் தொழிலை இழக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை தேசிய கட்டுமானத்துறை சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரையில், 90 சதவீத கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் உப தலைவர் எம்.டீ.போல் தெரிவித்துள்ளார். எரிபொருள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரிப்பு என்பனவற்றுடன், அரசாங்கத்தினால், கட்டுமான நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவு செலுத்தப்படாமை என்பன இதற்குப் பிரதான காரணங்களாகும்.

இதன் காரணமாக, கட்டுமானத்துறையில் உள்ளவர்கள், வங்கிகளுக்கு கடனை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். கட்டுமானத்துறையில், 10 முதல் 12 இலட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

அவர்களில், 75 சதவீதமானோர் தொழிலை இழந்துள்ளனர். இந்நிலையில் அரசாங்கம் இதனை சிறிதளவேனும் கருத்திற்கொள்ளவில்லை.

இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படாவிட்டால், கட்டுமானத்துறையில் உள்ள பெருமளவானோர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் என இலங்கை தேசிய கட்டுமானத்துறை சங்கத்தின் உப தலைவர் எம்.டீ போல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version