சம்மாந்துறை பொலிஸார் சூட்சுமமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த தம்பதிகளைக் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரி றபாய்டீனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கைது செய்யப்பட்ட தம்பதிகள் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 6 மாத காலமாக சம்மாந்துறை பகுதி 40 வீட்டுத்திட்டத்தில் ஐஸ் போதைப்பொருட்களை விநியோகித்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவன் ஒரு பல்கலைக்கழக மாணவன் என்பதுடன் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. இவர் ரூபா 12000 செலவு செய்து ஐஸ் போதைப்பொருளை பெற வந்தவர் என குறிப்பிடப்படுகிறது.
பொலிஸார் இவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், கைத்தொலைபேசிகள், ஐஸ் போதைப்பொருட்கள், வங்கி புத்தகம், பணம் செலுத்திய வங்கி சிட்டு போன்றவற்றை மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட தம்பதிகள் 34, 42 வயதுடையவர்கள் என்பதுடன் அவர்கள் 3 மாத காலமாக நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளம் பகுதியில் வீடு ஒன்றினை பெற்று தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட கல்விக் கல்லூரி மாணவர்களை இலக்கு வைத்து தனியார் வங்கி ஊடாக ரூபா 10000 ஐ பெற்றுக்கொண்டு வாடிக்கையாக குறித்த போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தம்பதிகள் உட்பட மற்றுமொருவர் சட்ட நடவடிக்கைகாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு நீதிவான், கணவன் மற்றுமொரு சந்தேக நபரான மாணவனுக்கு தலா ரூபா 9000 தண்டப்பணம் விதித்தார்.
