ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கும் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் இந்த வார இறுதியிலேயே கையெழுத்திடக்கூடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார். இது தொடர்பாக ஈரான் பதிலளித்தது. அதாவது, ஓர் ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றது.
இந்த ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டால், ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்து, உலகளாவிய எரிசக்தி விலைகளைக் கடுமையாக உயர்த்திய மூன்று மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மிக முக்கியமான இராஜதந்திர முன்னேற்றமாக இது அமையும். இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் பேச்சுவார்த்தையில் உள்ள உரையின் பெரும்பகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன.
பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் காரணம் காட்டி, ஈரான் மீதான திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்களை இரத்து செய்த பின்னர் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வந்தது. ஈரானுடனான போருக்கு நாங்கள் ஒரு சிறந்த தீர்வை எட்டியுள்ளோம் என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார். ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்டவுடன் நீரிணை அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும் என்றும் கூறினார்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமெனி இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தாரா என்று கேட்கப்பட்டபோது, ஆம் என்று நான் புரிந்துகொள்கிறேன் என்றார் ட்ரம்ப். அமெரிக்காவுக்காக துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் அதில் கையெழுத்திடக்கூடும் என்றும் குறிப்பிட்டார். இதற்கிடையில் இரு தரப்பினரும் பரஸ்பரத் தாக்குதல்களை நடத்தி, ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்திற்கு விரிசலை ஏற்படுத்தியுள்ளனர்.
