தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று 2026 குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டம் மாநிலம் முழுவதும் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது. 134.83 கோடி இந்திய ரூபா பெறுமதியில் இத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தமிழகத்தின் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்கள் இரண்டிற்கும் பயனளிக்கும். தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிப்பதிலும் நெல் சாகுபடி முக்கியப் பங்கு வகிக்கிறது.
குறுவை, கார் மற்றும் சொர்ணாவரி பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடி, வேளாண் உற்பத்திக்கு கணிசமான பங்களிப்பை அளிக்கிறது. காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடி முக்கியமானதாகும்.
இந்த திட்டத்தின் கீழ் டெல்டா மாவட்டங்களுக்கு 77.50 கோடி இந்திய ரூபாவும், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 57.33 கோடி இந்திய ரூபாவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்படும். இது விவசாயிகளின் சாகுபடிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
