எபோலா வைரஸ் தாக்குதல்: ஒரு மாதத்தில் ஆப்பிரிக்காவில் 200 பேருக்கு மேல் பலி!

ஆப்பிரிக்கக் கண்டத்தின் கொங்கோ மற்றும் உகாண்டா நாடுகளில் பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பின் வேகம் மிக கவலைக்கிடமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 200 பேர் உயிரிழந்துள்ளது என்பது ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கையின்படி தெரிய வந்துள்ளது.

இதுவரை 894 பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அலை முந்தைய எபோலா தொற்று அலைகளை விட மிகவும் தீவிரமாக உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பதிவாகியுள்ள பாதிப்புகளில் 90 சதவீதம் கொங்கோவின் கிழக்கு மாகாணமான இதுரி பகுதியில் காணப்படுகின்றன. எபோலா தொற்று கொங்கோவின் எல்லையைக் கடந்து உகாண்டாவிற்கும் பரவியுள்ளது.

உகாண்டாவில் 19 பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தற்பொழுது எபோலா தொற்று 38 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த கடுமையான சூழலை எதிர்கொள்வதற்கு களத்தில் போதிய மருத்துவப் பணியாளர்களும் மருத்துவ உபகரணங்களும் இல்லாதது ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் பெரும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகள் உறுதியளித்த நிதியில் வெறும் 10 சதவீதம் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளதால், எபோலா ஒழிப்புப் பணிகள் கடுமையான தேக்கநிலையைச் சந்தித்துள்ளன. இந்த நிலையில், எபோலா தொற்றுப் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அவசர மருத்துவ உதவிகளை வழங்குவதுடன், எபோலா பற்றிய விழிப்புணர்வை பெற்றுக்கொடுப்பதும் மிகவும் அவசியமாக உள்ளது. இதுபோன்ற தீவிர சூழலை எதிர்கொண்டு போராடுவதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவைப்படுகிறது.