யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டுமென காணி உரிமையாளர்கள் கடந்த ஏழு வாரங்களாக வெள்ளிக்கிழமை தோறும் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
வலி வடக்கு பகுதியில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து இப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக உள்ளது. இப்பகுதியில் உள்ள 651 ஏக்கர் நிலங்கள் காணி உரிமையாளர்களுக்கு சொந்தமானவை.
யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கழித்தும், இப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு படைகள் வெளியேறாத நிலையில், காணி உரிமையாளர்கள் தமது காணிகளை விடுவிக்க வேண்டுமென தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஏழாவது முறையாக காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியின் அருகே உள்ள இராணுவப் பங்களாவை நோக்கி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர்.
காணி உரிமையாளர்கள் தமது காணிகளை விடுவிக்க வேண்டுமென தொடர்ந்து போராட்டங்களை நடத்துவதென முடிவெடுத்துள்ளனர். அவர்கள் தமது காணிகளை விடுவிக்கும் வரை இப்போராட்டங்கள் தொடருமென அவர்கள் கூறுகின்றனர்.



















