பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங், பர்ஹான் அக்தரின் புதிய படமான ‘டான் 3’ இல் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார். இந்தப் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், ரன்வீர் சிங் இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டார்.
இந்த விலகல் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், ‘துரந்தர்’ படம் சூப்பர் ஹிட் அடைந்ததால் ரன்வீர் சிங் ‘டான் 3’ படத்தில் இருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விலகல் காரணமாக தயாரிப்பாளர் பர்ஹான் அக்தர் ரூ.45 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக மேற்கிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு ரன்வீர் சிங்கின் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று அறிவித்தது.
இந்த சூழலில், ரன்வீர் சிங் திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் கில்டு, இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படம் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட திரைத்துறை அமைப்புகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. இதனால் ரன்வீர் சிங் மீதான தடையை மேற்கிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு திரும்பப் பெற்றுள்ளது.
இந்த விஷயத்தில், மேற்கிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பி.என்.திவாரி கூறுகையில், “இந்த விஷயத்தில் யாரும் ஜெயிக்கவும் இல்லை, தோற்கவும் இல்லை. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாத வண்ணம், ஒன்றாகப் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


















