கிரேட் நிக்கோபார் தீவு மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தீவில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் தென்கோடியில் உள்ள இந்திரா பாயிண்ட் பகுதிக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டதாகவும், அங்கு வாழும் பழங்குடியினர் மற்றும் குடியேறியவர்களுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதாக இருந்தால், ஐஎன்எஸ் பாஸ் தளத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தின் காரணமாக 1.5 கோடி மரங்கள் வெட்டப்படும் அபாயம் உள்ளது என்றும், பவளப்பாறைகள் சேதமடைவதுடன், பழங்குடியினர் மற்றும் இராணுவப் பணியாளர்கள் இடம்பெயர நேரிடும் என்றும் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். மேலும், பவளப்பாறைகள் இருக்கும் விவரம் அதிகாரப்பூர்வ வரைபடங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தத் தீவுகள் உலகம் இதுவரை கண்டிராத மிக அசாதாரணமான, நிலையான சுற்றுலாத் தலமாக விளங்க தகுதியானவை என்றும், அத்தகைய இந்தியாவிற்காகவே நாம் போராட வேண்டும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.



































