சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்த படம் ‘கனா’. நடிகரும், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருந்தது.
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், சிவகார்த்திகேயன், தர்ஷன், இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், முனீஷ்காந்த், நமோ நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி வெளியான கனா திரைப்படம் ரசிகரகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும் பெண் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வந்த முதல் தமிழ் படம் இது.
இப்படம் 2018-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்திருந்த கனா திரைப்படத்திற்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. கனா திரைப்படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ”இந்தியன் கேர்ள்” என்ற பெயரில் சீனாவில் இன்று வெளியாகி உள்ளது. இதனை வீடியோ பதிவின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தை தொடர்ந்து ரிலீஸாகும் இரண்டாவது திரைப்படம் கனா என்பது குறிப்பிடத்தக்கது.