எல்லோருடைய வீட்டிலும் சுவாமி படங்கள் தெய்வத் திருவுருவங்கள் படங்களாக இருக்கும் பொழுது எந்த விதமான நிபந்தனைகளும் இல்லை! ஆனால் விக்ரகங்களை கொண்டு பூஜை செய்வதற்கு ஒரு தனி பூஜை முறை உண்டு. அவற்றை கடைபிடிக்க முடியாதவர்கள் விக்ரகங்களை வீட்டில் வைத்திருப்பதை தவிர்ப்பது தான் நல்லது. விக்ரகங்களை வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாத தவறு என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
பெரிய பெரிய விக்ரகங்களை வாங்கி வைத்திருப்பவர்கள் கட்டாயம் அந்த விக்ரகங்களுக்கு உரிய பூஜை முறையை கடைபிடிக்க வேண்டும் என்பது நியதி. கோவில்களில் மட்டுமே விக்ரஹங்கள் பெரிய அளவில் வைத்திருப்பார்கள். அதை வீட்டிற்கு கொண்டு வரும் பொழுது அவ்வளவு எளிதாக அதை அலட்சியமாக நினைத்து விட முடியாது.
தெய்வ விக்கிரகங்களுக்கு அதிக சக்தி உண்டு. அது சாதாரண கல்லால் செய்யப்பட்ட விக்ரகமாக இருந்தாலும் சரி, உலோகங்களை கொண்டு செய்யப்பட்ட விக்ரகங்களாக இருந்தாலும் சரி உங்கள் விரல் அளவிற்கு மட்டுமே விக்ரகங்களை வீட்டில் வைத்து வழிபட வேண்டும். அதற்கு மேல் பெரிய அளவுள்ள விக்ரஹங்கள் வைத்திருப்பவர்கள், அதற்கு உரிய அபிஷேகங்கள், ஆராதனைகள் எப்போதும் கடைப்பிடித்து வழிபட வேண்டும். இதனால் அவர்களுடைய இல்லத்தில் சுபிட்சம் பெருகும்.
பெரிய விக்ரஹங்களை வைத்துக் கொண்டு அதை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டு விடுவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உண்டு. எனவே விக்ரகங்களை வைத்திருப்பவர்கள் எப்பொழுதும் பூஜை, புனஸ்காரங்களை சரி வர கடைப்பிடித்து வர வேண்டும். முதலில் விக்கிரகங்கள் வைத்திருப்பவர்கள் தினமும் அல்லது வாரம் ஒரு முறையாவது அந்த விக்ரகங்களுக்கு உரிய நல்ல நாளாக பார்த்து அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்பவர்கள் கரவை பசும்பால், பழச்சாறு, தேங்காய் தண்ணீர், மனிதனுடைய கை, கால் படாத சுத்தமான தண்ணீர், இளநீர், அரைத்த சந்தனம் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்யலாம். இப்படி எதுவும் கிடைக்காத பட்சத்தில் நீங்கள் அபிஷேகம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
கோவிலுக்கு நீங்கள் தானம் செய்யும் பொழுதும், அபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கிக் கொடுக்கும் பொழுதும் தூய பக்தியுடன் வாங்கிக் கொடுக்க வேண்டும். கோவிலுக்கு அபிஷேகம் செய்யும் பொருட்களில் கரவை பசும்பால் மற்றும் இளநீர் ரொம்பவே விசேஷமானது. இந்த பொருட்களை கோவிலுக்கு அபிஷேகம் செய்ய கொடுப்பதன் மூலம் உங்களுடைய வம்சத்திற்கே நற்பலன்கள் அதிகரிக்கும். சாபம் விமோசனம் பெறலாம், பாவங்கள் நீங்கி சுகம் உண்டாகும்.
அது போல வம்ச விருத்தி உண்டாக கோவிலுக்கு சுத்தமான பசு நெய் தானம் செய்ய வேண்டும். நீங்கள் கொடுக்கும் நெய்யால் மூலவருக்கு விளக்கு ஏற்றும் பொழுது உங்களுடைய வம்சம் தழைக்கும். விக்ரஹங்கள், வேல், திரிசூலம் போன்றவற்றை உலோகங்களில் வைத்திருப்பவர்கள் கட்டாயம் அதற்கு தினமும் தண்ணீர் மற்றும் பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். சாதாரண தண்ணீராவது ஊற்றி தினமும் அபிஷேகம் செய்தாக வேண்டும். இத்தகைய விஷயங்களை கடைபிடிக்க முடியாதவர்கள், அதனை முற்றிலுமாக தவிர்த்து விடுவது தான் நல்லது.