பாம்பு கடித்த பின்னர் பொதுவாக யாருக்காக இருந்தாலும் பயம் ஏற்படும். இதற்காக பின்வரும் முக்கிய தரவுகளை அழுத்திக் கூற வேண்டும். “அநேகமான பாம்புகள் விஷம் உள்ளவைகள் அல்ல, தீண்டிய பாம்பு விஷமுள்ளதாக இருந்தாலும் அது விஷத்தை உட்செலுத்தாமலிருக்க முடியும், பல அடையாளங்கள் இருந்தாலும் விஷம் உடலினுள் புகுந்துவிட்டது என கருதலாகாது, விஷம் உட்புகுந்தாலும் வைத்தியசாலைகளில் நற்பலனளிக்கக்கூடிய சிகிச்சை முறை உண்டு, இச் சிகிச்சைகள் பூரண குணத்தை தரவல்லது” போன்ற வார்த்தைகளை கூறுங்கள். மருந்தை விட உபசரிப்பு முக்கியம்.
கடிபட்ட இடத்தை அசைக்காதீர்கள்
பாம்பு தீண்டினால், கடிபட்ட இடத்தை அசையாமல் வைத்திருப்பது அவசியம். ஏனெனில், தீண்டப்பட்ட உறுப்பு அசைந்தால் விஷம் உடலினுள் மிக விரைவாக அகத்துறிஞ்சப்படும். எனவே தீண்டப்பட்டவரை அசையாது வைத்திருக்க வேண்டும். அவரை நடக்க வைப்பதை விட தூக்கிச் செல்வதே சிறந்தது. உறுப்பை ஒரு துண்டு பலகை போன்ற கடினமான பொருளின் மேல் வைத்துக் கட்டி அந்த உறுப்பை அசைவற்றதாக செய்வதால் உட்புகுந்த விஷம் அகத்துறிஞ்சப்படுவதை தாமதப்படுத்தலாம். இது வலியை குறைப்பதற்கு உதவும். முதற் சிகிச்சை அளிப்பதற்கென பாம்பு தீண்டுதலுக்கு உள்ளான பகுதியை கயிறு போன்றவற்றால் இறுக்கி கட்டுப்போடுவதை தவிர்க்கவும். இலங்கைப் பாம்புகளால் ஏற்படும் பாம்புக் கடிக்கு துணிகளால் அழுத்தமாக கட்டுவது தவிர்க்கப்பட வேண்டும்.
விஷத்தை உறிஞ்சுதல்
பாம்பு கடித்த இடத்தில் தோலின் மேலிருக்கும் விஷத்தை அகற்ற அவ்விடத்தை சவர்க்காரமும் நீரும் பாவித்து மெதுவாக கழுவ வேண்டும் அல்லது ஈரத்துணியால் துடைக்க வேண்டும். தீண்டப்பட்ட காயத்தை கூரிய கத்தியால் வெட்டுவதும் அல்லது உறிஞ்சும் முறையை கையாள்வதும் தவிர்க்கப்பட வேண்டும். பாம்புகள் அநேகமாக நஞ்சை மிகவும் ஆழமாக புகுத்துவதனால் உறிஞ்சுவது எந்தவித பயனையும் தரமாட்டாது. அனுபவமற்ற முறையில் கத்தியால் வெட்டுவதனால் தசை நார், இரத்தக் குழாய்கள் நரம்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்த நேரிடலாம்.
கடித்த இடத்தில் வீக்கம்
விஷப் பாம்பு தீண்டுதலுக்குப் பின்னர் தீண்டப்பட்ட உறுப்பு வீங்குவது ஒரு பொதுவான விடயமாகும். அப்படி வீக்கம் ஏற்படின் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தடுக்க, அணிந்திருக்கும் மோதிரம், வளையல்கள், பாதசரம், நூல், இறுக்கமான ஆடை போன்றவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.
மருந்து
வலியை குறைக்க “பரசிற்றமோல்’ பாவிக்கலாம். (அஸ்பிறின்)வயிற்றிலே இரத்தக்கசிவை ஏற்படுத்தும். பிரதானமாக முத்திரை புடையன் தீண்டியபின் அஸ்பிறின் கொடுக்கக் கூடாது. மதுபானம் விஷத்தை உடம்பில் விரைவில் பரவச் செய்யும். ஆகவே அதை கொடுக்கக் கூடாது. செவ்விளநீர், இளநீர், பழரசங்கள் என்பவற்றை கொடுக்கக்கூடாது. பாம்பு தீண்டலினால் சிறுநீரகத்தில் சேதம் ஏற்பட்டால் இவற்றிலுள்ள பொட்டாசியம் எனப்படும் ஒரு வகை உப்பு மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்த முடியும்
மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல்
பாம்பு தீண்டுதலுக்கு உள்ளானவரை முடியுமான வரை விரைவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும். பாம்புக்கடி ஏற்பட்ட சூழ்நிலை பற்றிய தகவல்களை சரியாக வழங்குவதன் மூலம் பாம்பின் வகையை அடையாளம் காண உதவும். கையடக்கத் தொலைபேசி மூலம் பாம்பினை புகைப்படம் எடுப்பதன் மூலம் பாம்பின் வகையை இலகுவாக அடையாளம் காணலாம். சரியான மருத்துவ சிகிச்சையை அளிக்க பாம்பின் வகையை அடையாளம் காண்பது அவசியம். இதன் மூலம் கடித்த பாம்பை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது தேவையற்றது. உயிருள்ள அல்லது இறந்த பாம்புகளை மிகவும் அவதானத்துடன் கையாள வேண்டும்.
மூச்சுவிட சிரமம்
பாம்பு தீண்டியவருக்கு மூச்சுவிடுதலில் சிரமம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் செயற்கை சுவாசத்தை வழங்குவது நோயாளியின் உயிரை காப்பற்ற உதவும் முதலுதவி சிகிச்சையாகும். பொதுவாக இப்பிரச்சினை விரியன் இன பாம்புகளால் ஏற்படுகின்றது.