கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு அவதான எச்சரிக்கை!

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக அதிகரித்துவரும் நிலையில் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பலத்த மழையால் சிறு குளங்கள் வான்பாய்கின்றன. இதேவேளை இரணைமடு குளத்தின் கீழ்பகுதியில் உள்ள மக்களிற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் வேளையில் சில மணிநேரம் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் மாவட்டத்தில் உள்ள குளங்களின் அடைவுமட்டம் அதிகரித்து வருவதுடன் சில நீர்பாசன குளங்கள் வான்பாய்ந்து வருகின்றன.

இன்று மாலை 6 மணி வசிப்பின்படி 36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடு குளம் 35 அடி 05 அங்குலமாக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியான நீர் வருகை இருப்பின் வான்கதவுகள் திறக்கப்படும் என்பதால் கனகராஜன் ஆற்றுப் படுக்கையின் கீழ் உள்ள மக்களை அவதானத்துடன் இருக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, 26 அடி அடைவுமட்டம் கொண்ட கல்மடுகுளம் 25 அடி 10 அங்குலமாகவும், 12 அடி அடைவுமட்டம் கொண்ட பிரமந்தனைறுகுளம் 11 அடி 09″ அங்குலமாகவும், 25 அடி அடைவுமட்டம் கொண்ட அக்கராயன் குளம் 23 அடி 07 அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.

10 அடி அடைவுமட்டம் கொண்ட கரியாலை நாகபடுவான் குளம் 7 அடி 03 அங்குலமாகவும், 08 அடி 06 அங்குலம் அடைவுமட்டம் கொண்ட குடமுருட்டி குளம் 07 அடி 02 அங்குலமாகவும் உயர்ந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை 19 அடி அடைவுமட்டம் கொண்ட புதுமுறிப்பு குளம் 19 அடி 07 அங்குலமாக உயர்ந்து 07 அங்குலம் வான்பாய்ந்து வருகிறது.

10 அடி 06 அங்குலம் அடைவுமட்டம் கொண்ட கனகாம்பிகைக்குளம் 10 அடி 11 அங்குலமாக அதிகரித்து 05 அங்குலம் வான் பாய்ந்து வருவதாகவும், 09 அடி 06 அங்குலம் அடைவுமட்டம் கொண்ட வன்னேரிக்குளம் 09 அடி 07 அங்குலம் வான் பாய்ந்து வருவதாகவும் நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

நீர்நிலைகளின் கீழ்ப்பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், வாழ்வாதாரங்கள், கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை நாளை புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெறும் நிலையில் குளங்களிற்கு செல்லல், நீர்விளையாட்டுக்களில் ஈடுபடுதல், தொழிலாளர்கள் தவிர்த்து மீன்பிடித்தல், நீர்நிலைகளை பார்வையிட செல்லல் போன்றவற்றை தவிர்க்குமாறும், குறிப்பாக சிறுவர், முதியவர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version