67 சுற்றிவளைப்புகளில் 5,000க்கும் அதிகமான டீசல் உட்பட எரிபொருட்கள் மீட்பு – 100க்கு மேற்ப்பட்டோர் கைது!

நாட்டில் எரிபொருட்களை சட்ட விரோதமாக சேகரித்து , களஞ்சியப்படுத்தி அனுமதிப் பத்திரம் இல்லாமல் அவற்றை அதிக விலையில் விற்பனை செய்பவர்களைத் தேடி விஷேட சுற்றிவளைப்புக்கள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று 67 சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார். பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர், பொலிஸ் உளவுப் பிரிவினருடன் இணைந்து இச்சுற்றி வளைப்புக்களை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு சட்ட விரோதமாக எரிபொருள் சேகரித்த 135 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில்,5,690 லீற்றர் பெற்றோல், 5,620 லீற்றர் மண்ணெண்ணெய், 10,115 லீற்றர் டீசல் என்பவற்றை காவல்துறை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிரக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபன சட்டம், 1979 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க கனிய எண்ணெய் உற்பத்தி, கட்டுப்பாடு, விநியோக மேற்பர்வைச் சட்டம், 1887 ஆம் ஆண்டின் கணிய எண்ணெய் கட்டளைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் ஊடாக கிடைக்கப் பெற்றுள்ள சட்ட ரீதியிலான அதிகாரத்துக்கு அமைய, பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கிணங்க , இலங்கை கணிய எண்ணெய் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து பொலிசார் இந்த கைது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Quantcast
Exit mobile version