திருமணத்திற்கு சாட்சியாக திருமாங்கல்யம் மட்டுமின்றி, ஒரு பெண்ணுடைய காலில் மெட்டி அணிவதும் சிறப்பம்சமாக இருக்கிறது. பெண்கள் அணிந்து கொள்ளும் மெட்டியில் விதவிதமான வடிவங்கள் இருந்தாலும், வட்ட வடிவிலான எளிய வளையங்களை மாட்டிக் கொள்வதே விசேஷமானது. இந்த வகையில் மெட்டி விதவிதமான வடிவங்களில் மாட்டிக் கொண்டால் ஆபத்து வருமா? சாஸ்திரங்கள் இதைப் பற்றி என்ன கூறுகிறது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் அலச இருக்கிறோம்.
திருமணமான பெண்களுக்கு திருமாங்கல்யத்தில் எப்பொழுதும் மஞ்சள் கயிறு சேர்த்து இருக்க வேண்டும். சிலருடைய சம்பிரதாயப்படி சரடாக திருமணத்தின் பொழுதே அணிவது வழக்கம். சரடு அணிந்தாலும் நீங்கள் அதனை மாங்கல்யத்துடன் சேர்க்கும் இடங்களில் மஞ்சள் நூல் கொண்டு கட்டி சேர்ப்பது முறையானது! மஞ்சள் நூல் மங்களத்தின் அடையாளமாக விளங்குகிறது. இதை அணிந்து கொள்ளும் பெண்களின் கணவனுடைய ஆயுள் தீர்காயுளளாக இருக்கும் என்பது நியதி.
அது போல் அருந்ததி என்னும் நட்சத்திரத்தை பார்த்து கணவன் தன் மனைவியின் கால் விரல்களில் வெள்ளியாலான மெட்டியை போட்டு விடுவது ஒரு சம்பிரதாயம் ஆகும். இதனால் ஒருமித்த தம்பதியினர் ஆக வாழ்வார்கள் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. மெட்டியை தங்கத்தில் அணியக் கூடாது. இப்படி அணியப்படும் மெட்டி விதவிதமான வடிவங்களில் இப்போது விற்பனைக்கு உள்ளன. இதற்காக பெண்கள் எல்லாவற்றையும் வாங்கி விதவிதமாக விரல்களில் அணிந்து கொள்கின்றனர். விருப்பம் போல மெட்டியை பெண்கள் கண்டிப்பாக அணியக் கூடாது. அவர் அவர்களின் குல வழக்கப்படி எப்படியான மெட்டியை அணிந்து கொள்ள வேண்டுமோ, அப்படியான மெட்டியை கால் கட்டை விரலின் பக்கத்தில் இருக்கும் இரண்டாவது விரலில் அணிய வேண்டும்.
அது போல் மெட்டி தேய்ந்து விட்டால் அதனை உடனே மாற்றி விட வேண்டும். மெட்டி தேய தேய உங்களுடைய பரஸ்பர ஒற்றுமையும் தேய்ந்து கொண்டே வரும் என்கிற ஐதீகம் உண்டு. எனவே மெட்டி அணிபவர்கள் அதனை அதிகம் தேய்ந்து விடாமல் பாதுகாப்பது அவசியமாகும். பெண்ணுடைய காலில் அணியும் மெட்டி, நரம்புகளைத் தூண்ட செய்து கருப்பைக் கோளாறுகளை சரி செய்யும் என்பது தான் இதனுடைய தார்மீக கருத்தாக இருக்கிறது. எனவே நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கும், பின்னாலும், ஒவ்வொரு காரணங்கள் நிச்சயம் ஒளிந்து கொண்டு இருக்கும்.
அந்த வகையில் பெண்கள் மூன்று விரல்களில் மெட்டி அணிவது என்பது கணவனுக்கு ஆபத்தை தேடி தரும் ஒரு அபசகுனமான செயலாகும். ஒன்று அல்லது இரண்டு விரல்களில் மட்டுமே பெண்கள் மெட்டி அணிய வேண்டும். மூன்றாவது விரலில் மெட்டி அணிந்தால் அது கணவனுடைய ஆயுளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறது சாஸ்திரங்கள். மெட்டி அணியும் பொழுது விரலுக்கு நடுவே மெட்டி நிற்க வேண்டும். விரல் முழுவதும் உள்ளே சென்று விடக் கூடாது. எனவே உங்களுடைய கால் விரலுக்கு ஏற்ப சரியான அளவுகளில் மெட்டியை வாங்கி அணியவும்.
தேவையில்லாமல் மெட்டியை கழட்டி வைப்பதும் கூடாது. பெண்ணின் காலில் அணிந்திருக்கும் மெட்டியானது எப்பொழுதும் அணிந்த படியே இருக்க வேண்டும். அவர்கள் நடக்கும் பொழுது தரையில் பட்டு எழும் மெட்டியின் ஓசை ஆனது, குடும்பத்தில் சுபிட்சத்தை நல்கும் ஒரு இனிய மங்கல ஒலி ஆகும். எனவே மெட்டி அணியும் பொழுது இவ்வளவு விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.