தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்புகளுடன் எதிர்வரும் படங்களில் ஒன்றாக இருக்கும் ‘அண்டர் 18’ படத்தின் பூஜை சென்ற நாள் சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஷ் தயாரித்து, கார்த்திக் பெருமாள்சாமி இயக்குகிறார்.
இந்தப் படத்தில் கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், சரத்குமார், ராதிகா சரத்குமார், ஸ்ரீபிரியா உள்பட பல முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். விக்ராந்த் இப்படம் பற்றி கூறும்போது, “இது ஒரு ஃபேமிலி டிராமா கதை. 18 வயதுக்கு கீழ் உள்ள வாலிபர்களை, சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்கள், எப்படி சமூகத்துக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைச் சொல்லும் படம் இது” என்றார்.
இப்படத்தில் கிச்சா சுதீப் நடிக்க சம்மதித்தது குறித்து விக்ராந்த் கூறுகையில், “நட்சத்திர கிரிக்கெட்டில் பழக ஆரம்பித்து, பிறகு குடும்ப ரீதியாக அவரும் நாங்களும் நெருங்கிவிட்டோம். இப்படக் கதையை முழுமையாகக் கூட கேட்காமல், ‘உனக்காக இதில் நடிக்கிறேன்’ என்றார். எவ்வளவு நாள் கால்ஷீட் வேண்டும் என்று கேட்டார். சொன்னோம். சரி என்று சொன்னது பெரிய விஷயம்” என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் 10-ம் திகதியன்று ஆரம்பமாகிறது.
விக்ராந்த் தனது அரசியல் தலைவர் சகோதரர் விஜய் பற்றி கூறும்போது, “என் சகோதரர் விஜய் முதல்வர் ஆகியிருக்கிறார். அவரை சந்திக்கவில்லை என்றாலும் போனில் வாழ்த்துச் சொன்னேன். திரைத் துறைக்காக அவர் பல நல்ல விஷயங்களைப் பண்ணுவார்” என்றார். அதோடு இந்தப் படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் வில்லனாக நடிக்கிறேன் என்றார்.


































