செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சிக்காக அமைக்கப்படும் தரவு மையங்கள் சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பநிலையை அதிகரிக்கின்றன என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இத்தகைய தரவு மையங்களை அமைக்கும் நிறுவனங்களில் Google, Amazon, மற்றும் Microsoft ஆகியவை அடங்கும். இந்த தரவு மையங்களின் வெப்பத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆய்வின்படி, AI தரவு மையங்களைச் சுற்றியுள்ள நிலப்பரப்பின் வெப்பநிலை சராசரியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. சில பகுதிகளில் இந்த அதிகரிப்பு 9 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நிகழ்வை ஆராய்ச்சியாளர்கள் “Data Heat Island Effect” என அழைக்கின்றனர்.
நகரங்களில் காணப்படும் “Urban Heat Island” விளைவிற்கு ஒத்ததாக, அதிகளவு கணினி சேவையகங்கள் தொடர்ந்து இயங்குவதால் வெளியேறும் வெப்பம் சுற்றுச்சூழலின் வெப்பநிலையை உயர்த்துகிறது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் இத்தகைய தரவு மையங்கள் அதிக அளவில் குவிந்துள்ளன.
இவற்றுக்கு மிகப்பெரிய அளவில் மின்சாரம் மற்றும் குளிரூட்டும் அமைப்புகள் தேவைப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன. உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரம், மின்சார நுகர்வு, நீர் பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான தாக்கங்கள் குறித்து கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
AI தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் சம அளவு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாகும். இதற்கான தீர்வுகளைக் கண்டறிவதில் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்துகின்றனர். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதத்தில் AI தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பது இன்றியமையாததாக இருக்கிறது
