மோகன்லால் இலங்கையில் படப்பிடிப்பு நடத்துவது குறித்து கூறினார்

இந்திய நடிகர் மோகன்லால் விஸ்வநாதன் மற்றும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் இன்று இலங்கை வந்துள்ளனர். இவர்கள் “பேட்ரியட்” என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இங்கு வந்துள்ளனர்.

இலங்கை வந்ததும் இவர்களை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் வரவேற்றனர்.
“பேட்ரியட்” என்ற திரைப்படம் இந்தியாவின் எட்டு மொழிகளில் வெளியிட தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் மோகன்லால், மம்முட்டி, ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ஜரின் ஷிஹாப் மற்றும் ரேவதி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மோகன்லால் 10 நாட்கள் இலங்கையில் தங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அவர் ஆறு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்தார்.

இலங்கையில் படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள் குறித்து கேட்கப்பட்ட போது, “இலங்கை படப்பிடிப்புக்கு மிக சிறந்த இடங்களை வழங்குகிறது. வேலை செய்ய மிகவும் நட்பான இடம். இலங்கைக்கு வருகை தருவதை நான் மிகவும் விரும்புகின்றேன். எனது எதிர்காலத் திட்டங்களுக்கும் இங்கு படப்பிடிப்பைத் திட்டமிட்டு வருகிறேன். சினிமாவுக்கான புதிய அமைப்புகளுடன் கூடிய அழகான இடமாக இது இருக்கின்றது” என்று மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வந்திருக்கும் மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் இன்று காலை 11.20 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அவர்கள் இந்தியாவின் கொச்சியிலிருந்து UL-166 என்ற ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்து வந்தனர்.