அவுஸ்திரேலியாவின் சிட்னிக்குச் செல்லும் வழியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியது. இதனால் விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குத் திரும்பியது.
இன்று அதிகாலை 1:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் விமானப் பயணிகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
விமானத்தில் 217 பயணிகளும் 16 பணியாளர்களும் இருந்தனர். மின்னல் தாக்கத்தின் காரணமாக விமானம் திரும்பி வந்ததாக விமான நிலையப் பணி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மின்னல் தாக்கத்துக்கு உள்ளான விமானம் பாதுகாப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பயணிகளை சிட்னிக்கு ஏற்றிச் செல்வதற்காக மற்றொரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மாற்று விமானம் இன்று காலை 6:06 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. மின்னல் தாக்கிய விமானம் ஆய்வு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொட்டகைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
