புவிக்கோளத்தின் காலநிலை வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலின் விளிம்பில் மனிதகுலம் நின்றுகொண்டிருக்கிறது. உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள 2026 மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான உலகளாவிய பருவகால காலநிலை அறிக்கையானது, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் ஒரு புதிய ஆபத்துச் சங்கொலியை எழுப்பியுள்ளது.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தற்காலிகமாக அமைதி காத்த பசிபிக் பெருங்கடல், தற்போது மிக அதிவேகமாக வெப்பமடைந்து, மனிதகுலம் அஞ்சிய ‘எல் நினோ’ காலநிலையாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த எல் நினோ தீவிரமடைதலானது, அதே காலகட்டத்தில் இந்தியப் பெருங்கடலில் உருவாகும் ‘நேர்மறை இந்தியப் பெருங்கடல் இருமுனை’ மாற்றத்துடன் கைகோர்க்கவுள்ளது.
இந்த இரு பேராபத்துகளின் கூட்டுச் சேர்க்கை காரணமாக, உலகெங்கிலும் உள்ள நிலப்பரப்புகளில் 70% முதல் 80% வரை சராசரியை விட மிகக் கடுமையான வெப்ப அலைகள் உருவாகவுள்ளன. அறிவியல் மாதிரிகளின் அதிர்ச்சியூட்டும் கணிப்புநடப்பு 2026 மே முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ‘நினோ 3.4’ பிராந்தியத்தின் வெப்பநிலை இயல்பை விட 1.5^C வரை அதிகரிக்கும் என உலகளாவிய கணினி மாதிரிகள் 100% ஒருமித்த கருத்துடன் மிகத் துல்லியமாகக் கணித்துள்ளன.
இக்காலநிலை மாற்றம் உலக வரைபடத்தை இரண்டு தீவிர எல்லைகளுக்குள் தள்ளப்போகிறது. ஒருபுறம் அமேசான் காடுகளும், அவுஸ்திரேலியாவும், தென்கிழக்கு ஆசியாவும் வறட்சியின் பிடியில் கருகப் போகின்றன. மறுபுறம் மத்திய பசிபிக் பகுதிகள் முன்னெப்போதும் இல்லாத பெருவெள்ளத்தில் மூழ்கப் போகின்றன.
