அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஒரு முக்கியமான வழக்கில், சமூக ஊடகங்களால் தனது மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறிய இளம் பெண்ணுக்கு, நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
கலே என்ற 20 வயது இளம்பெண், தனது சிறுவயது முதல் சமூக வலைதளங்களுக்கு அடிமையானதால், மன அழுத்தம் மற்றும் உடல் தோற்றம் குறித்த கவலை போன்ற பாதிப்புகளுக்கு உள்ளானதாக வழக்குத் தொடர்ந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் அவருக்கு 3 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற விசாரணையில், இலாபம் ஈட்டும் நோக்கில் சிறுவர்களைக் கவரும் வகையிலும், அவர்களை அடிமையாக்கும் வகையிலும் இந்தத் தளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜூரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த பாதிப்பிற்கு மெட்டா நிறுவனம் 70 வீதம் பொறுப்பு என்றும், யூடியூப் 30 வீதம் பொறுப்பு என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அடிப்படை இழப்பீடு தவிர, தண்டனைக்குரிய அபராதமாக மேலும் 30 டொலர்கள் மில்லியன் வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்கள், “இந்தத் தீர்ப்பில் எங்களுக்கு உடன்பாடில்லை, நாங்கள் மேல்முறையீடு செய்வோம்” என தெரிவித்துள்ளன. இந்த தீர்ப்பு, சமூக வலைதள நிறுவனங்களுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான வழக்குகளுக்கு ஒரு முன்னோடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
