பிரான்சு வான்வழியில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்

வடகிழக்கு பிரான்சின் டோம்ப்லைன் நகரில் நடந்த ஒரு கொடுரமான விமான விபத்தில் விமானி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமானம் ஒரு உள்ளூர் பாராசூட் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்ததாகும்.

பாராசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 5 இளம் மாணவர்களும், அவர்களுக்குப் பயிற்சி அளித்துவந்த 5 அனுபவமிக்க பயிற்றுனர்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். விமானத்தை இயக்கிய விமானியும் உயிரிழந்துள்ளார். பிரான்சின் நான்சி-எஸ்ஸி விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காக இந்த விமானம் புறப்பட்டது.

இந்த விமானம் ஓடுதளத்தை விட்டு வானில் சில நிமிடங்களிலேயே டோம்ப்லைன் பகுதியில் விபத்துக்குள்ளாகி நொறுங்கியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் அவசரக்கால மீட்புப் படையினரும், பொலிஸாரும் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மெர்டே-எட்-மொசெல்லே நிர்வாக மாவட்டத்தில் உள்ள நான்சி-எஸ்ஸி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பிரான்ஸ் பொலிஸார் பொதுமக்களை அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக பிரான்ஸ் விமானப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.