Home உலகம் இந்தியா வரும் 24-ந்தேதி ஆரம்பிக்கப்படவுள்ள கோடை விழா…!

வரும் 24-ந்தேதி ஆரம்பிக்கப்படவுள்ள கோடை விழா…!

0

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் திட்டமிட்டபடி கோடைவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக பிரசித்தி பெற்ற பிரையண்ட் பூங்காவில் லட்சக்கணக்காக மலர்செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது அவை பூத்துக்குலுங்கி வருகின்றன. இதேபோல ரோஜா தோட்டத்திலும் பல்வேறு வகையான ரோஜா பூக்கள் நடவு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளன.

மேலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே தொடர் சாரல்மழை பெய்து வருவதாலும், வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்ததாலும் இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனிடையே இந்த வருடத்திற்கான கோடைவிழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது என மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார். 29-ந்தேதி வரை 6 நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மேலும் ஜூன் 2-ந்தேதி வரை 10 நாட்கள் சுற்றுலாத்துறை சார்பில் கோடைவிழா நடைபெற உள்ளது.

இந்த விழா நாட்களில் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, வாத்து பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள் என்பதால் கொடைக்கானலில் தற்போதே அனைத்து தங்கும் விடுதிகளும் புக்கிங் செய்யப்பட்டு வருகின்றன. 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகளை தோட்டக்கலைத்துறையினர் மற்றும் சுற்றுலாத்துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version